டெல்லியில் ஆன்லைன் விற்பனை மற்றும் பட்டாசு விநியோகத்திற்கும் கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது . இந்த ஆண்டு தீபாவளி, புத்தாண்டு மற்றும் பல பண்டிகைகளின் போது பட்டாசு வெடிப்பதற்கான தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஜனவரி 1-ம் தேதி வரையில் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. கடந்த முறை போல் இந்த முறையும் ஆன்லைனில் பட்டாசு விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடை விதிக்கப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் தெரிவித்தார். இந்த கட்டுப்பாடு ஜனவரி 1, 2023 வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் அமைச்சர் இதனை அமல்படுத்த டெல்லி போலீஸ், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் வருவாய்த் துறையுடன் இணைந்து செயல் திட்டம் வகுக்கப்படும் என கூறியுள்ளார். டெல்லியில் ஆன்லைன் விற்பனை மற்றும் பட்டாசு விநியோகத்திற்கும் கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மக்களின் உடல் நலனை கருதியும் பட்டாசு வெடிப்பதற்கு இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமாக வட மாநிலங்களில் பண்டிகைகள் விமர்சையாக கொண்டாடப்படும் .அதுவும் தீபாவளி பண்டிகை ,விநாயகர் சதுர்த்தி மற்றும் பல பண்டிகைகள் பட்டாசு வெடித்து வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நிலையில் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்திருப்பதால் பட்டாசு வெடிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், தீபாவளிக்கு அடுத்த வாரத்தில் தலைநகர் டெல்லியில் மாசு அளவு தொடர்ந்து மோசமான நிலையில் இருந்தது. தலைநகர் டெல்லியில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க முழு தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டது. நகர அரசாங்கம் பட்டாசு வெடிப்பதற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த 'படகே நஹி தியே ஜலாவ்' பிரச்சாரத்தையும் தொடங்கியது.
மேலும் பட்டாசுகளை எரிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. முக்கியமாக இந்த அறிவிப்பு பட்டாசு உற்பத்தியாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மக்கள் பலர் காற்று மாசுபாட்டால் நோய்களுக்கு ஆளாகி சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாச கோளாறு மற்றும் ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த
2020ம் ஆண்டில், கொரோனா ஊரடங்கு காலத்தில் டெல்லியில் நிலவிய காற்று மாசுபாட்டால் 57,000 பேர் உயிரிழந்ததாக ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.
இதனை அடுத்து தற்போது டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்ததை விட காற்றில் உள்ள பி எம் 2.5 செறிவு அதிகமாக உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசின் இந்த அறிவிப்பு பட்டாசு விற்பனையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை பட்டாசு இல்லாமல் களையிழந்து போகும் என பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.