கடந்த நவம்பர் 19 அன்று, ஆக்ராவின் மாவட்ட மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று அங்கி பணியாற்றும் மருத்துவர்களையும், பணியாளர்களையும் ஆடிப் போகச் செய்துள்ளது. கடந்த நவம்பர் 19 அன்று, உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் பூசாரி ஒருவர் கிருஷ்ணர் சிலையின் கை உடைந்தவிட்டதாகக் கூறி, அதனைத் தூக்கிக் கொண்டு சிகிச்சை அளிக்குமாறு கோரி அதிர்ச்சி அளித்துள்ளார்.


கடந்த நவம்பர் 19 அன்று, லேக் சிங் என்ற பூசாரி காலை கிருஷ்ணர் சிலையைக் குளிப்பாட்டிய போது, அதன் கைகளுள் ஒன்று தவறுதலாக உடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி, உடைந்த சிலையை எடுத்துக் கொண்டு ஆக்ரா மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். முதலில் சற்று தயக்கமடைந்த மருத்துவப் பணியாளர்கள், சிறிது நேரத்திற்குப் பிறகு `ஸ்ரீ கிருஷ்ணா’ என்ற பெயரில் பதிவு செய்து, சிலையின் கையை பேண்டேஜ் மூலம் ஒட்டி அனுப்பியுள்ளனர். கையில் உடைந்த கிருஷ்ணர் சிலையுடன் பூசாரி அழுதுக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 



இந்த விவகாரத்தைப் பார்த்தவர்கள், மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் காலை 9 மணிக்கே பூசாரி லேக் சிங் வந்துவிட்டதாகவும், மருத்துவமனைப் பணியாளர்களிடம் கெஞ்சி வலியுறுத்தியதாகவும் கூறுகின்றனர். `நான் கடவுளோடு தீவிரமாக ஒன்றிப் போயிருக்கிறேன் என்பதால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அதனைச் சரிசெய்யவே, கிருஷ்ணருக்குச் சிகிச்சை அளிக்க மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்றேன்’ என்று கூறுகிறார் பூசாரி லேக் சிங். ஆக்ராவின் அர்ஜுன் நகர் பகுதியில் உள்ள பத்வாரி கோயிலில் கடந்த 30 ஆண்டுகளாகப் பூசாரியாகப் பணியாற்றுகிறார் லேக் சிங். `மருத்துவமனையில் என்னுடைய கோரிக்கையை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதனால் எனக்குள் நான் உடைந்து போனதோடு, என் கடவுளுக்காக அழத் தொடங்கினேன்’ என்று இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளார் லேக் சிங். 


 






லேக் சிங்குடன் அப்பகுதி மக்கள் சிலரும் மருத்துவமனைக்கு வந்ததாக தலைமை மருத்துவக் கண்காணிப்பாளரும் மருத்துவருமான அஷோக் குமார் அகர்வால் இந்த விவகாரம் குறித்து கூறியுள்ளார். மேலும் பூசாரியின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டு, அவருக்காக உடைந்த சிலைக்கு பேண்டேஜ் அணிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.