இந்தியாவின் போக்குவரத்து சேவைகளில் ரயில்சேவைகள் மிகவும் தவிர்க்க முடியாதது. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி போன்ற நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ளூர் மக்களுக்காக மின்சார ரயில்சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் மக்கள்தொகை அடர்த்தியாக உள்ள நகரத்தில் மும்பை நகரமும் ஒன்றாகும்.
மகாராஷ்ட்ராவின் தலைநகரான மும்பையில் மின்சார ரயில் சேவையை தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள ரயில் நிலையங்களில் பைகுல்லா ரயில் நிலையமும் முக்கியமானதாகும். இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரயில் மூலமாக பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பைகுல்லா ரயில் நிலையத்திற்கு ஒரு 40 வயது மதிக்கத்தக்க பெண் மின்சார ரயில் ஏறுவதற்காக வந்துள்ளார். அவர் ஏறுவதற்குள் ரயில் எடுத்துவிட்டதால், ஓடிக்கொண்டிருந்த ரயிலில் அவர் ஏறினார். ஆனால், அவரால் ரயிலில் ஏற முடியாததுடன் தவறி கீழே விழுந்துவிட்டார். ரயில் அவரை இழுத்துக்கொண்டு சில விநாடிகள் சென்றபோது, அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் உடனே துரிதமாக ஓடிச்சென்று அந்த பெண்ணை ரயிலின் சக்கரத்திற்குள் சிக்காமல் அவரை ரயில் நிலையத்தின் மேடையில் இழுத்துவிட்டார். அவருடன் ரயில்வே நிலைய ஊழியர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு அந்த பெண்ணை காப்பாற்ற உதவினார். பின்னர், அந்த பெண்ணை அங்கிருந்த மீட்டு ஆசுவாசப்படுத்தினர்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதை மத்திய ரயில்வே தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அந்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. சமயோசிதமாக செயல்பட்டு துரிதமாக பெண்ணை காப்பாற்றிய பெண் காவலர் சப்னா கோல்கர் என்று தெரியவந்துள்ளது. சப்னா கோல்கருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்