ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மீண்டும் எழ தொடங்கியுள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டிகள் இது தொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.
ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக்கும் நோக்கில் இரு மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்துள்ளார். தலைவர் பதவியை மீண்டும் ஏற்க மாட்டேன் என்பதில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கும் நிலையில், முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாகேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பாகேல் தனது ட்விட்டர் பக்கத்தில், "சத்தீஸ்கர் காங்கிரஸ் கமிட்டி மற்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி இந்த தீர்மானத்தை முன்வைத்துள்ளன. இது இரண்டு மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்த யோசனை மற்ற மாநிலங்களிலிருந்தும் வந்தால், ராகுல் இந்த விஷயத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டி, முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியது. மாநில அளவில் அமைப்பு தேர்தல் தொடர்பாக இக்கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், முதலமைச்சர் பூபேஷ் பாகேல், கட்சியின் மாநில பொறுப்பாளர் பி.எல். புனியா மற்றும் மாநிலத்தின் பிற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக்க ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டியும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், கூட்டத்தில் ஒரு திட்டத்தை முன்வைத்தார். அதில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகளை காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ரகுவீர் மீனா இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தார். இதற்கு மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோட்சராவும் ஆதரவு அளித்தார்.
முன்னதாக காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "என் மனதில் எந்த குழப்பமும் இல்லை. நான் காங்கிரஸின் தலைவரா இல்லையா என்பது, தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும்போதுதான் தெரியும். ஆனால், நான் என்ன பண்ணுவேன்னு முடிவு பண்ணிட்டேன். மனசுல எந்த குழப்பமும் இல்ல" என்றார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு செப்டம்பர் 22 அன்று வெளியாகும். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்புமனுக்களை செப்டம்பர் 24 முதல் செப்டம்பர் 30 வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 30, 2022. வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 8 ஆகும்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என காங்கிரஸ் காரிய கமிட்டி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.