நேரில் பார்க்கும்போதாகட்டும், வீடியோக்களாகட்டும் யானைகளும் அவற்றின் மெதுமெதுவான அசைவுகளும் நமக்கு என்றுமே சலிப்பூட்டுவதே இல்லை!
மண்ணை வாரி இறைப்பது தொடங்கி, குளிப்பது, சரிந்து மலைச்சரிவுகளில் இறங்குவது என யானைகளின் ஒவ்வொரு க்யூட்ட்டான செயலும் இணையத்தில் ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளி வருகின்றன.
அந்த வகையில் முன்னதாக தன் குட்டியைப் பாதுகாத்தவாறு மலைப்பாதையில் வரும் பேருந்துக்கு யானைகள் வழிவிடும் வீடியோ இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.
பேருந்து வருவதை தூரத்திலேயே பார்த்துவிட்டு2, குட்டி யானையை ஓரமாக அழைத்துச் சென்று அரண் போல் தங்களுக்கு இடையே வைத்துக்கொண்டு, தும்பிக்கைகளை கவசம் போல் சேர்த்து பாதுகாத்தபடி பேருந்துக்கு இந்த யானைகள் வழிவிடுகின்றன.
இந்த க்யூட்டான வீடியோவை சுதாராமன் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், ”வழிவிடும்போது பெரிய யானைகள் குட்டியை எப்படி கேடயம்போல் பாதுகாக்கின்றன என்பதை பாருங்கள். இந்த காரணத்துக்காக தான் இவை மென்மையான ராட்சதர்கள் என அழைக்கப்படுகின்றன” என அழகான கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் அதிக லைக்குகளைப் பெற்று ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இதேபோல் முன்னதாக ஹோட்டல் அறையில் தூங்கும் பெண் ஒருவரை யானை ஒன்று தன் தும்பிக்கையால் எழுப்பிவிடும் காட்சி இணையவாசிகளிடையே ஹிட் அடித்தது.
யானைகளை தேசிய விலங்காகக் கொண்ட யானைகளின் தேசமான தாய்லாந்து நாட்டின் ரிசார்ட் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவை சாக்ஷி எனும் பெண் பகிர்ந்துள்ளார்.
யானை தன்னை தூக்கத்தில் இருந்து எழுப்பும் வீடியோ பகிர்ந்துள்ள சாக்ஷி, இந்த ரிசார்ட்டில் யானைகளுக்கு உணவளித்து, அவற்றுடன் வாக்கிங் சென்று, குளிப்பாட்டி, விளையாடி என அனைத்தும் செய்து மகிழலாம் என்றும் இது மிகவும் புதுவிதமான அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தார். இன்ஸ்டாவில் பல மில்லியன்கள் பார்வையாளர்களைப் பெற்று இந்த வீடியோ ஹிட் அடித்தது.
அதேபோல், யானைக்குட்டி ஒன்று தன் தாய்க்கு அருகில் நின்றபடி தன் குட்டி தும்பிக்கையால் தண்ணீர் குடிக்க முயலும் வீடியோ ஒன்றும் முன்னதாக இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது.
தன் குட்டித் தும்பிக்கையால் தண்ணீரை குடிக்க முடியாமலும், எனினும் விடாமலும் தண்ணீரை அலசி முயற்சிக்கும் யானையின் க்யூட் செய்கை சிரிப்பை வரவழைத்து லைக்ஸ் அள்ளியது குறிப்பிடத்தக்கது.