46 வயதான நடிகர் புனீத் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை மதியம், அக்டோபர் 29, பெங்களூரில் மாரடைப்பால் இறந்தார். பெங்களூருவில் உள்ள ஜெயதேவா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியோவாஸ்குலர் சயின்ஸ் இயக்குநர் டாக்டர் சிஎன் மஞ்சுநாத் கூறுகையில், “புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவுக்குப் பிறகு, இருதய பரிசோதனைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 30% முதல் 35% வரை அதிகரித்துள்ளது,” என்றார்.


சராசரியாக, மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு ஒரு நாளைக்கு 1,200 நோயாளிகளைப் பார்க்கிறது. நவம்பர் 1ம் தேதி, கன்னட ராஜ்யோத்சவாவை முன்னிட்டு, பொது விடுமுறை நாளான, மருத்துவமனையில் மொத்தம் 1,700 நோயாளிகள் வெளிநோயாளிகள் பிரிவில் இருந்ததாக டாக்டர் மஞ்சுநாத் தெரிவித்தார். “எங்கள் வெளி நோயாளிகள் பிரிவிற்கு இதயப் பரிசோதனைக்காக மக்கள் வருகிறார்கள். இசிஜி (எலக்ட்ரோ கார்டியோகிராம்), எக்ஸ்ரே மற்றும் எக்கோ கார்டியோகிராம் போன்ற அடிப்படை சோதனைகளை நடத்தி வருகிறோம். தேவைப்பட்டால் டிரெட்மில் (உடற்பயிற்சி அழுத்தம்) சோதனையையும் நாங்கள் செய்கிறோம், ”என்று அவர் மேலும் கூறினார்.


பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையிலும் இதேபோன்று நோயாளிகள் வருகை அதிகமாக பதிவாகியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையின் சேஷாத்ரிபுரம் கிளையின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) உதய் தாவ்தா, கடந்த சில நாட்களில் இருதய பரிசோதனைகளின் எண்ணிக்கையில் 30% அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். "மருத்துவமனையில் பொதுவாக இதயம் தொடர்பான பரிசோதனைகளுக்காக ஒரு நாளைக்கு 50-60 நோயாளிகள் பதிவு செய்கிறார்கள். புனித் ராஜ்குமார் இறந்த பிறகு, நாளொன்றுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. நோயாளிகளை அனுமதிக்க வரம்பு இருப்பதால் எங்களால் அனைவருக்கும் இடமளிக்க முடியாது, அப்படி பார்த்தால் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்", என்று உதய் கூறியிருக்கிறார்.



இதயப் பரிசோதனைகளுக்கான தேவை அதிகரித்திருப்பது புனீத் மரணமே முழுக் காரணம் எனக் கூற முடியாது என்றாலும், இந்தச் சம்பவம் பலரை கவலையடையச் செய்துள்ளது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதில் பெயர் பெற்ற புனீத் ராஜ்குமாருக்கு இதய நோய் அதற்கு முன்னதாக இருக்கவும் இல்லை. 


பெங்களூரில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் கன்னிங்ஹாம் சாலை கிளையின் இருதயவியல் இயக்குனர் டாக்டர் கேசவா ஆர் பேசுகையில் “புனித் ராஜ்குமாரின் இறப்பிற்கு முன்பே, பல இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பிட்னஸ் ஆர்வலராக இருந்த அவர் பிரபலமான நபராக இருந்ததும், இப்படி நடந்ததும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது அவருக்கு நடக்குமானால், அவர்களுக்கும் இது நடக்கலாம் என்று அவர்கள் பீதியடைகிறார்கள், பீதியின் எதிர்வினை தான் இது,” என்று கூறினார்.


இதயப் பரிசோதனை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது உண்மையில் ஒரு பாசிடிவான வளர்ச்சி என்று உதய் குறிப்பிட்டார். “இந்தியா போன்ற ஒரு நாட்டில் தொற்றா நோய்களின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது, அவற்றை முன்கூட்டியே தடுப்பது சிறந்தது. ஒவ்வொருவரும் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும். உயிர்களைக் காப்பாற்றுவதற்கான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நம்மிடம் உள்ளன. சோதனைகளை மேற்கொள்வது குறைந்தபட்சம் சரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகளையாவது கொடுக்கும்,” என்று உதய் விளக்கினார்.



டாக்டர் மஞ்சுநாத்தும் இதை ஒப்புக்கொண்டார். “இது நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது நல்லது. மக்கள் தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக உணர்ந்தாலும், இத்தகைய சோதனைகள் தன்னம்பிக்கையை அளிக்கும். இனிமேல் வருடாந்தர சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் இது மக்களைத் தூண்டும்,” என்றார். ஆனால் இந்த திடீர் தேவை மருத்துவமனைகளில் கூட்டத்தை அதிகமாக ஏற்படுத்தக்கூடும் எனபது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.


நல்ல இதய ஆரோக்கியத்தை பராமரிக்க ஒருவர் எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கைகள் குறித்து டாக்டர் மஞ்சுநாத் கூறும்போது, ​​“நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் வலுவான மாரடைப்பு போன்ற பல ஆபத்து காரணிகளோடு குடும்பத்தில் உள்ளவர்களை இதய பரிசோதனைக்கு உட்படுத்தலாம். ஒருவருக்கு நெஞ்சு வலி, நடக்கும்போது மற்றும் குனியும்போது, திரும்பும்போது நெஞ்சில் எரியும் உணர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்களும் இதய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதற்கான காரணத்தை அவர் விளக்கினார்: “இந்தியாவில் இளைஞர்களிடையே இருதய நோய்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. உண்மையில், எங்களின் சொந்த தரவுகளின்படி, இந்தியாவில் 30% மாரடைப்பு 40 வயதுக்குட்பட்டவர்களுக்கே வருகிறது. எனவே 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தொடர்ந்து இதயம் தொடர்பான பரிசோதனைகள் செய்துகொள்வது நல்லது.


எப்படி இருந்தாலும் மருத்துவ பரிசோதனைகள் ஆரோக்கியமாக இருப்பதில் ஒரு பகுதி மட்டுமே என்று டாக்டர் கேசவா சுட்டிக்காட்டினார். “உடல்நலம் என்பது ஒரு தொடர்ச்சியான செயல் என்பதை மக்கள் உணரவில்லை, ஒரு நாள் செக்கப்பிற்குச் சென்று பிறகு அதை மறந்துவிடுகிறார்கள். ஆபத்து காரணிகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும், மேலும் சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.


(இக்கட்டுரையின் தகவல்கள், The News Minute தளத்தில் வெளியாகியுள்ளது)