தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அறிவிப்பை நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனால் நாளை முதல் இந்தியா எங்கும் பெட்ரோல் டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் லிட்டர் ஒன்றுக்கான விலை ரூ.109ஐக் கடந்துள்ளது. மற்ற சில மாநிலங்களில் ரூ. 120ஐக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இது சாமானியர்களை பெரிதும் பாதித்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களும் வரியைத் தளர்த்தும்படி மத்திய அரசுக்குத் தொடர் கோரிக்கை வைத்து வந்தன. இதற்கிடையேதான் இன்று பெட்ரோலுக்கும் லிட்டருக்கு ரூ 5ம் டீசலுக்கு லிட்டருக்கு ரூ 10ம் குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் நாளைமுதல் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டுதான் இந்த அறிவிப்பு எனக் கூறப்பட்டாலும் அசாம், இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல் எதிரொலியாகத்தான் இந்த விலைக்குறைப்பு எனக் கூறப்படுகிறது. இடைத்தேர்தல் முடிவுகளின்படி அசாம் தவிர பல்வேறு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி பெறும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஒரு இடத்தில் கூட அந்தக் அக்ட்சி வெற்றி பெறவில்லை. இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அத்தனை இடங்களிலும் வெற்றி அடைந்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி அளிப்பதாகவும் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள் எனவும் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் கர்நாடகாவிலிருந்து பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களே மத்திய அரசுக்கு பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கச் சொல்லிக் கடிதம் எழுதிவந்தனர். நாடுதழுவிய நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததுதான் இடைத்தேர்தல் பின்னடைவுக்கும் காரணம் எனக் கூறப்பட்டது. இதற்கிடையேதான் தற்போது இந்த விலைக்குறைப்பு முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.