ICWA, இந்திய மருத்துவ சங்கம் (IMA) மற்றும் மன் தேஷி மகிளா வங்கி ஆகியவற்றின் ட்விட்டர் ஹேண்டில்களை ஹேக் செய்யப்பட்டன. இதனால் மீண்டும் Twitter இன் பாதுகாப்பு கவலைகள் தொடர்வதாக விமர்சனங்கள் எழுகின்றன. ஹேக்கர்கள் அதிகாரப்பூர்வ கணக்குகளை ஹேக் செய்து, அந்த கணக்குகளின் பெயரை 'எலன் மஸ்க்' என மாற்றியுள்ளனர். மாற்றி அதிலிருந்து பல தேவையற்ற டீவீட்களை பதிவு செய்து வருகின்றனர். முன்னதாக டிசம்பரில், இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் ஹேக்கர்கள் ஊடுருவி, இந்தியா அதிகாரப்பூர்வமாக பிட்காயினை சட்டப்பூர்வ டெண்டராக ஏற்றுக்கொண்டதாகக் கூறி ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.



பிரதமர் மோடியின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதைப் போலவே, ஐசிடபிள்யூஏ, ஐஎம்ஏ மற்றும் மன் தேஷி மகிளா வங்கியின் கணக்குகளில் வெளியிடப்பட்ட ட்வீட்கள் அனைத்தும் கிரிப்டோகரன்சியை ஊக்குவிக்கின்றன. கிரிப்டோகரன்ஸிகளைப் பற்றிய டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியின் பல ட்வீட்களை மறுபகிர்வு செய்ய ஹேக்கர்கள் இந்த கணக்குகளைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து எலன் மஸ்க் மற்றும் டெஸ்லாவின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் போடப்பட்டுள்ள எல்லா டீவீட்டுகளுக்கு கீழேயும் கமென்டில் ஒரு டெலிக்ராம் லிங்கை பகிர்ந்திருக்கிறார்கள்.


ஒட்டுமொத்த ஐடியிலுமே அது மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் ஐஎம்ஏ வின் பழைய ட்வீட்டுகள் எதுவும் டெலிட் செய்யப்படவில்லை. ஆதாரங்களின்படி, ஹேக்கிங் ஆனது இரு வழிகளில் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடவுச்சொல் திருடப்பட்டதன் விளைவாக இருக்கலாம் அல்லது ட்விட்டரை பயன்படுத்துபவர்கள் ஏதாவது ஒரு ஸ்பாம் லிங்கை கிளிக் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.






ஞாயிற்றுக்கிழமை இரவு கணக்குகளை ஹேக்கர்கள் கைப்பற்றினர். ICWA இன் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டு இயல்பு நிலைக்கு மாறிய நிலையில், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மன் தேஷி மகிளா வங்கியின் கணக்குகளில் இன்னும் தீங்கிழைக்கும் ட்வீட்கள் உள்ளன. ஹேக்கிங்கிற்குப் பிறகு IMA இன் கணக்கு அதன் புகைப்படத்தை மாற்றியுள்ளது மற்றும் கணக்கின் பெயர் இருக்குமிடத்தில் எலன் மஸ்க் என்பதை நீக்கிவிட்டு ஒரு புள்ளி வைக்கப்பட்டுள்ளது, இது கணக்கு மீட்டெடுக்கப்படுவதைக் குறிக்கிறது. ICWA வின் கணக்கு 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்' என்பதால் ஹேக் செய்யப்பட்டிருப்பது கவலைக்குரியதாகவே உள்ளது. இந்த விவகாரம் இப்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஐடி பாதுகாப்பு குழுவான CERT-IN ஆல் கவனிக்கப்பட்டு வருகிறது.