பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் ரயில்வே ட்ராக் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


பண்டோல் ரயில் நிலையத்திலிருந்து லோஹத் சிகர் மில்ஸுக்கு செல்லும் ரயில்வே டிராக்கை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த டிராக் 2 கிமீ தூரம் செல்லக் கூடியது. இந்த சம்பவத்தை அடுத்து சில காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருடுபோன 2 கிமீ தூர ரயில்வே டிராக்கை விற்றதும் அம்பலமாகியுள்ளது. 


சில நாட்களுக்கு முன்னர் தான் பாட்னாவில் 29 அடி உயரமான மொபைல் டவர் திருடுபோனது. 2006ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தால் நிறுவப்பட்ட அந்த மொபைல் டவர் பின்னர் ஜிடிஎல் என்ற தொலைதொடர்பு கோபுர நிர்வாக நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த மொபைல் டவரை கடைசியாக 2022 ஆகஸ்டில் நிறுவனம் ஆய்வு செய்தது. இந்நிலையில் கடந்த வாரம் வீட்டின் மாடியில் இருந்த அந்த மொபைல் டவரை காணவில்லை. இது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


பீகார் மாநில தலைகர் பாட்னாவிலிருந்து தெற்கே 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அமியவார் கிராம். இந்த கிராமத்தில் ஆற்றின் குறுக்கே 1972 ஆம் ஆண்டு இரும்பு பாலம் ஒன்று கட்டப்பட்டது. 500 டன் எடை கொண்ட இப்பாலம் தற்போது பயன்பாட்டில் இல்லை. மேலும் சேதம் அடைந்த இந்தப் பாலத்தை இடிக்க வேண்டும் என கிராம மக்கள் நீர்ப்பாசனத்துறையிடம் கோரிக்கை வைத்து இருந்தனர்.


இதை அறிந்த மர்ம கும்பல் ஒன்று தங்களை அரசு அதிகாரிகள் என்று கூறி பாலத்தை வெட்டத் தொடங்கியுள்ளனர். 2 நாட்கள் பொறுமையாக ஆர அமர்ந்து கேஸ் கட்டர்கள், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பாலத்தை வெட்டி எடுத்துள்ளனர். இது தொடர்பாக கிராம மக்கள் அவர்களிடம் கேட்ட போது, நாங்கள் நீர்ப்பாசத்துறை அதிகாரிகள் என்றும் தெரிவித்துள்ளனர்.


சந்தேகம் அடைந்த பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதற்குள்ளாக அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


குறிப்பாக பழைய இரும்பு விற்பனை செய்பவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸார், இந்தக் கும்பலைச் சேர்ந்த சிலரை அடையாளும் கண்டுள்ளோம். மேலும் சிலரை அடையாயம் காண முடிவில்லை என்று தெரிவித்தனர்.


இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் இந்த பாலத்திற்கு அருகில் இருந்த பழைய இரும்புப் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது. 


சமீப காலமாக பீகாரில் ரயில் கொள்ளை, வழிப்பறி, இதுபோன்ற இரும்புப் பொருட்கள் திருட்டு அதிகரித்துள்ளது.