ரூபாய் நோட்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி, சத்ரபதி சிவாஜி, அம்பேத்கர், சாவர்க்கர் ஆகியோரின் படங்கள் இடம்பெற வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ ராம் கதம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இவர்கள் படங்களுடன் ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடங்கி வைத்த அகில பாரத இந்து மகாசபை
கடந்த சில மாதங்களாக காந்திக்கு எதிரான பரப்புரைகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், நேற்று முன் தினம் (அக்.25) ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்துக்கு பதிலாக நேதாஜியின் புகைப்படத்தை இடம்பெறச் செய்ய வேண்டுமென அகில பாரத இந்து மகாசபை கோரிக்கை விடுத்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று (அக்.26)இந்திய ரூபாய் நோட்டுக்களில் காந்தியின் படத்துடன் லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் உருவங்களை பொறிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் சர்ச்சைப் பேச்சு
”ஒவ்வொரு நாளும் புதிய நோட்டுகள் அச்சிடப்படுகின்றன. நாம் என்னதான் முயற்சிகள் செய்தாலும், சில சமயங்களில் தெய்வங்கள் நம்மை ஆசிர்வதிக்காவிட்டால் நம் முயற்சிகள் பலிக்காது. நமது ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமிதேவியின் புகைப்படங்களை அச்சிடுவது நாட்டுக்கு செழிப்பைத் தரும்” எனத் தெரிவித்திருந்தார். தனது கோரிக்கையை விரைவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமாக எழுத உள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ ராம் கதம், ரூபாய் நோட்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி, சத்ரபதி சிவாஜி, அம்பேத்கர், சாவர்க்கர் ஆகியோரின் படங்கள் இடம்பெற வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாஜக எம்எல்ஏ ட்வீட்
மேலும் தனது ட்வீட்டில், இந்தத் தலைவர்களின் புகைப்படங்கள் 500 ரூபாய் நோட்டுகளில் இருக்கும்படியான ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ள ராம் கதம், அகண்ட பாரதம், புதிய பாரதம், ஜெய் ஸ்ரீ ராம் எனப் பதிவிட்டுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக சாடியுள்ள கதம், ஆம் ஆத்மி கட்சியினரின் கோரிக்கைகள் உண்மையாக இருந்தால் நாடு ஏற்றுக்கொண்டிருக்கும் என்றும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டுமே அவர்கள் தெய்வங்களை நினைவு கூர்வதாகவும் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கண்டனம்
முன்னதாக அரவிந்த கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸின் பி அணி என்றும், அவருக்கும் எந்தவித புரிதலும் இல்லை என்றும், அரவிந்த் கெஜ்ரிவால் பாகிஸ்தானுக்கு சென்றால் தான் ஒரு பாகிஸ்தானி தனக்கு வாக்களியுங்கள் எனக் கேட்பார் என்றும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.