மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் உபயோகித்தவர்கள் கூட்டத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானும் கைது செய்யப்பட்டார். மும்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. வருகின்ற 7 அக்டோபர் வரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் காவலில் விசாரிக்கப்படுகிறார். பாலிவுட்டின் பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே ஷாருக்கானின் பழைய வீடியோ ஒன்று இது தொடர்பாகத் தற்போது வைரலாகி வருகிறது. சிமி கரேவலின் நிகழ்ச்சியில் மனைவி கௌரி கானுடன் பங்கேற்கும் ஷாருக் தன்னுடைய மகன் 23-24 வயதிலேயே போதைப்பொருள் எடுத்துக்கொள்வது முதல் உடலுறவு வரை அனைத்திலும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறுகிறார். அந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. 






முன்னதாக, மும்பை சொகுசு கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருட்கள்  பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் இன்றைய வைரலான ஆர்யன்கான் யார்? பார்க்கலாம்.
ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானுக்கு பெரிதாக அறிமுகம் தேவையில்லை. அவருக்கு ஏற்கெனவே சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அப்பாவின் முகச்சாயலை அப்படியே கொண்டிருக்கும் ஆர்யன் ‘லைம் லைட்டிலிருந்து’ விலகியே இருக்க நினைப்பவர் என கூறப்படுகிறது. 



ஷாரூக் கான்- கவுரி கான் தம்பதியின் முதல் மகன் ஆர்யான் கான். அவருக்கு தற்போது 24 வயதாகிறது. இவருக்கு சுஹானா கான் என்ற தங்கையும், ஆப்ராம் கான் என்ற தம்பியும் உள்ளனர். முஸ்லிம் அப்பாவுக்கும்- இந்து அம்மாவுக்கும் பிறந்த ஆர்யன் இரண்டு மதங்களையும் சிறுவயதிலிருந்தே போற்றியே வளர்ந்துள்ளார்.புகழ்பெற்ற அனிமேஷன் திரைப்படமான லயன் கிங்கின் ஹிந்தி வெர்ஷனில் சிம்பா கதாபாத்திரத்திற்கு ஆர்யன்தான் குரல் கொடுத்துள்ளார். சிம்பாவின் அப்பாவான முஃபாசா காதாபாத்திரத்திற்கு ஆர்யனின் அப்பா ஷாருக் கான் குரல் கொடுத்திருந்தார். அதன்பிறகு 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்ற ஷாருக் கான் - ஆர்யன் கான் ஆகியோர் இந்திய அணிகளின் ஜெர்சியை அணிந்திருந்தார்கள். அதில் ஷாருக் கான் முஃபாசா என எழுதியிருந்த ஜெர்ஸியையும், ஆர்யன் கான் சிம்பா என எழுதியிருந்த ஜெர்ஸியையும் அணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். 



ஆர்யனுக்கு ஷாருக்கான் போன்று நடிப்பதில் பெரிதாக ஆர்வம் இல்லை, ஆனால் படங்களை இயக்குவதில்தான் அதிகம் ஆர்வம் கொண்டவர் எனக்கூறப்படுகிறது.  ஒரு நேர்காணலில் ஆர்யன் ஒரு சிறந்த எழுத்தாளர் என ஷாருக் குறிப்பிட்டார். இயக்குநருக்கான படிப்புகளையும் ஆர்யன் அமெரிக்காவில் பயின்றுள்ளார். ‘தி இன்க்ரிடிபில்ஸ்’ என்ற படத்திற்கு டப்பிங் கொடுத்ததற்காக சிறந்த குழந்தை டப்பிங் ஆர்ட்டிஸ்டுக்கான விருதையும் பெற்றுள்ளார்.  



2001ம் ஆண்டு வெளியான கபி குஷி கபி காம் (KABHI KHUSHI KABHIE GHAM) என்ற படத்தில் ஆர்யான் கான் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அந்த படத்தில் ஆரம்ப பாடல் காட்சியில் ஜூனியர் ஷாருக் கானாக ஆர்யன் நடித்துள்ளார். ஜெயாபச்சன் வைத்திருந்த குழந்தை ஆர்யன்தான். அதேபோல இவர் 2006ம் ஆண்டு ஷாரூக் கான்- ப்ரீத்தி ஜிந்தா நடித்த கபி அல்விடா நா கெஹ்னா (Kabhi Alvida Na Kehna) என்ற படத்தில் கால்பந்தாட்ட வீரராகவும் நடித்திருந்தார். ஆனால் படத்தின் ஃபைனல் எடிட்டிற்கு பிறகு அந்த காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. 
நடிகர் அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா நவேலி நந்தா, ஆர்யானுக்கு நெருங்கிய தோழி. இருவரும் டேட்டிங் சென்றதாக வதந்திகள் பரவின. ஆனால் அவர்கள் இருவரும் டேட்டிங் செல்லவில்லை, இருவரும் நல்ல நண்பர்கள் அவ்வளவுதான் என குடும்பத்தினர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதன்பிறகு நவ்யாவும், தாங்கள் இருவரும் டேட் செய்யவில்லை என விளக்கமளித்திருந்தார்.


 


மற்ற ஸ்டார்களின் குழந்தைகளைப் போலவே ஆர்யன் கானும் வெளிநாட்டில்தான் தன் படிப்புகளை மேற்கொண்டார். லண்டனின் செவென் ஓக்ஸ் பள்ளியில் 2016ம் ஆண்டு படிப்பை முடித்தார். அதன்பிறகு தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஃபைன் ஆர்ட்ஸ், சினிமேட்டிக் ஆர்ட்ஸ், ஃபில்ம் அண்டு டெலிவிஷன் ப்ரடக்‌ஷன் படிப்பில் சேர்ந்து இந்த ஆண்டில்தான் பட்டம் பெற்றார். சமூக இடைவெளியைப் பின்பற்றி நடைபெற்ற அந்த விழாவில் அவர் கலந்துக்கொண்டு தனது பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். பட்டம் பெறும் உடையில் கையில் சான்றிதழுடன் நிற்கும் அவரது புகைப்படம் இந்த ஆண்டு மே மாதத்தில் வைரலானது.  அதில் ஆர்யன் ஷாருக் கான் என எழுதியிருந்ததைக் காண யாரும் தவறியிருக்கமாட்டார்கள்.