தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா முகமது நபி குறித்து பேசியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய துணைக் கண்டத்தில் இயங்கி வரும் இஸ்லாமிக் ஸ்டேட் குராசன் மாகாணம், செய்தித் தொகுப்பு சேவையைத் தொடங்கியுள்ளது. ட்விட்டரில் உள்ள ஒரு பக்கமான Khorasan Diaryயின்படி, அமைப்பின் முதல் செய்தித் தகவல் இந்தியா மற்றும் இறைவனுக்கு எதிரான பிரச்சார சர்ச்சையை மையமாகக் கொண்டது.
“இந்த வீடியோவில் இந்தியாவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர்சர்மா மற்றும் இந்தியாவில் அண்மையில் முஸ்லிம்களின் வீடுகள் புல்டோசர் செய்யப்பட்ட காணொளிகளைக் கொண்டுள்ளது. இதில் ISKP அமைப்பின் இந்தியாவைச் சேர்ந்த தற்கொலைப்படையினரின் முந்தைய அறிக்கைகள் இடம்பெற்றுள்ளன. முடிந்தவரை இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் விடுக்கப்படுகிறது” என்று அதன் பதிவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “நரேந்திர மோடி மற்றும் ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் தற்கொலைப் படைத்தாக்குதலின் அனிமேஷன் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மிக விரைவில் தாக்குதல்களை நடத்துவோம் என்கிற செய்தியுடன் முடிவடைகிறது ”என்று அந்த பதிவு கூறுகிறது.
முன்னதாக, குராசன் மாகாண அமைப்பின் இதே விவகாரம் தொடர்பாக 50 பக்க ஆவணத்தையும் வெளியிட்டுள்ளனர். அதில் பிரதமர் நரேந்திர மோடி பசுவைச் செல்லமாகத் தட்டுவது போன்ற படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதைக் குறிப்பிட்டு இந்தியா மற்றும் இந்திய நலன்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அந்த ஆவணத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த வாரம், இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அல்-கொய்தா அமைப்பு, முகமது நபியை அவமதித்ததற்குப் பழிவாங்கும் வகையில் இந்திய நகரங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கும் கடிதம் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக,
பாரதிய ஜனதா கட்சியில் இருந்த நுபூர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகிய இருவரும் இஸ்லாம் மதம் தொடர்பாக தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்காரணமாக அந்த இருவரையும் அக்கட்சி நீக்கி உத்தரவிட்டது. மேலும் அவர்கள் கருத்திற்கும் பாஜகவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கத்தார், குவைத், ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகளிலுள்ள இந்திய தூதர்கள் அழைக்கப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கத்தார் நாடு இந்திய தூதரை அழைத்து தன்னுடைய கண்டனத்தை பதிவிட்டுள்ளது. அதில், “இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்பை உண்டாகும் கருத்துகளை ஒரு போதும் ஏற்க முடியாது. மேலும் உலகளவில் வளர்ச்சிக்கும் இந்திய வளர்ச்சிக்கும் பாடுபடும் சமூகத்தில் ஒன்றான இஸ்லாம் மீது இதுபோன்ற கருத்துகள் ஏற்புடையதில்லை. மேலும் முகமது நபி தொடர்பாக அவர் கூறிய கருத்துகள் முற்றிலும் தவறான ஒன்று” எனத் தெரிவித்திருந்தது.