ஆப்ரிக்கன் ஸ்வைன் ஃப்ளூ என்ற பன்றிகள் மத்தியில் பரவும் வைரஸ் நோய் பரவல் வேகமெடுத்துள்ளதால் மாநில கால்நடைத்துறை பன்றிகளை அழிக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளது.


அதன்படி வயநாடு மாவடத்தில் கடந்த ஞாயிறு தொடங்கி இதுவரை 349 பன்றிகள் அழிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கால்நடைத்துறை அதிகாரி பி.ஆர்.ராஜேஷ் தெரிவித்தார்.


இதற்காக 12 பேர் கொண்ட ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம் உருவாக்கப்பட்டுள்ளதாக மூத்த கால்நடை மருத்துவர் ஏ.தயாள் கூறினார். ஆப்பிரிக்கன் ஸ்வைன் ஃப்ளூவானது வளர்ப்பு மற்றும் காட்டுப் பன்றிகளை கடுமையாகப் பாதிக்கக்கூடிய நோய் என World Organisation for Animal Health கூறியுள்ளது. பன்றிகளின் ரத்தம், எச்சில், திசுக்கள் மூலமாகவும் இந்த நோய் பரவும் எனக் கூறப்படுகிறது. 


ஆப்ரிக்கன் ஸ்வைன் ஃப்ளூ வைரஸுக்கும் கரோனாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இருந்தாலும் இது வேகமாகப் பரவக் கூடியது என்பதால் இதை தடுக்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படுகிறது. கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேச மாநிலங்களில் ஆப்ரிக்கன் ஸ்வைன் ஃப்ளூ பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இப்போதுதான் இது கேரளாவில் கண்டறியப்பட்டாலும் முதன்முதலில் அசாம் மாநிலத்தில் கடந்து 2020 ஆம் ஆண்டே ஆப்ரிக்கன் ஸ்வைன் ஃப்ளூ கண்டறியப்பட்டது.


அதனால் அப்போது அங்கு ஆயிரக் கணக்கில் பன்றிகளைக் கொன்று குவித்தது. அதேபோன்ற நடவடிக்கைதான் இப்போது கேரளா, உபி உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடங்கியுள்ளது.


கேரளாவில் கடந்த 15 ஆம் தேதியன்று முதன்முறையாக மனத்தாவடி பகுதியில் இரண்டு பன்றி பண்ணைகளில் சில பன்றிகள் திடீரென இறந்தன. இதனையடுத்து அவற்றிற்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ஆப்ரிக்கன் ஸ்வைன் ஃப்ளூ தாக்கியிருப்பது உறுதியானது. பின்னர் மனத்தாவடி சுற்று வட்டார பன்றிப் பண்ணைகளில் 43 பன்றிகள் அடுத்தடுத்து இறந்தன. அத்தனைக்கு ஆப்பிரிக்கன் ஸ்வைன் ஃப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்த் தாக்கினால் பன்றிகள் இறப்பது 100 சதவீதம் உறுதியாகும்.




சீனாவிலேயே முதல் பாதிப்பு:


கொரோனா வைரஸ்தான் சீனாவின் வூஹான் மாநிலத்தில் இருந்து உலகிற்குப் பரவியது என்று நினைத்தால் ஆப்பிரிக்கன் ஸ்வைன் ஃப்ளூவும் அங்கிருந்துதான் பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவின் ஜியாங் மாநிலத்தில் அதாவது அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையோரத்தில் இருக்கும் பகுதியில் முதன்முதலில் பரவியது. ஆதலால் அங்கிருந்து இந்த வைரஸ் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். வழக்கமாக சாலையில் சுற்றித்திரியும் பன்றிகள்தான் இந்த வைரஸால் சாகும் என்ற நிலையில் பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளும் இறந்துள்ளன.


உலகம் இப்போது தான் மெள்ள மெள்ள கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வருகிறது. ஒரு புறம் குரங்கு அம்மை பரவல் மனிதர்களை தாக்க ஆரம்பித்திருக்கிறது. இன்னொரு புறம் ஆப்பிரிக்கன் ஸ்வைன் ஃப்ளூ அல்லது ஆப்பிரிக்கன் ஸ்வைன் ஃபீவர் எனப்படும் நோய் பன்றிகளை தாக்கி வருகிறது. வைரஸுடன் போராடும் காலகட்டமாகத் தான் 2019க்குப் பிந்தைய காலம் உலகிற்கு அமைந்துள்ளது.