வழக்கறிஞர்கள் தனிப்பட்ட அளவில் சாட்சியமாக இருந்து சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்து திருமணச் சட்டம் 1955இன் படி வழக்கறிஞர் அலுவலகங்களில் நடைபெறும் திருமணங்கள் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
சுயமரியாதை திருமணங்களை வழக்கறிஞர்கள் நடத்தி வைக்கலாமா?
இந்த தீர்ப்பை தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று ரத்து செய்துள்ளது. மேலும், வழக்கறிஞர்கள், நீதிமன்ற அதிகாரிகளாக இருப்பதால், இந்து திருமணச் சட்டம் 1955இன்படி (தமிழ்நாட்டுக்கு பொருந்தக்கூடிய) சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்து திருமணச் சட்டப்பிரிவு 7(A)இன்படி, அவர்கள் நண்பர்களாகவோ அல்லது உறவினர்களாகவோ இருந்து தனிப்பட்ட அளவில் திருமணங்களுக்கு சாட்சிகளாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
"வழக்கறிஞர்கள் தங்கள் அலுவலகங்களில் அல்லது தொழிற்சங்க அலுவலகங்களில் இத்தகைய திருமணங்களை நடத்தி, பின்னர் திருமண சான்றிதழ்களை வழங்க முடியாது" என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மே மாதம், சென்னை உயர் நீதிமன்றம், தங்கள் அலுவலகங்கள் அல்லது தொழிற்சங்க அலுவலகங்களில் ரகசிய திருமணங்களை நடத்தும் வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாநில பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டது.
வழக்கின் பின்னணி:
இளவரசன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இந்து திருமண சட்டப்பிரிவு 7(A)ன் கீழ், வழக்கறிஞர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டாலும், தனது மனைவியை அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக தங்களது வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கறிஞர்கள் தம்பதியினருக்கு சுயமரியாதை திருமண சான்றிதழை வழங்கியதையும் மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த திருமணம் செல்லாது என தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சுயமரியாதை திருமணங்கள்:
கடந்த 1968 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாடு அரசு சுயமரியாதை (சுயமரியாதை) திருமணங்களை சட்டப்பூர்வமாக்கியது. திருமணம் செய்து கொள்வதற்கான குறைந்தபட்ச வயதை அடைந்தவுடன், எந்த வித சடங்கு, சம்பிரதாயங்களும் இன்றி ஆண், பெண் திருமணம் செய்து கொள்ள இச்சட்டம் வழிவகுக்கிறது. உயர்சாதியாக கருதப்படும் பூசாரிகள் நடத்தி வைக்கும் திருமணங்களுக்கு மாற்றாக சுயமரியாதை திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டது. இருப்பினும், இந்த திருமணங்களும் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.
இதையும் படிக்க: AIIMS Doctors: மூச்சு நின்னு போயிடுச்சு.. நடுவானில் சென்ற விமானத்தில் உயிருக்கு போராடிய 2 வயது குழந்தை.. அசர வைத்த மருத்துவர்கள்