சமூக வலைதளங்களில் குறைவான ஃபாலோயர்களை வைத்து கொண்டு, தங்களை செலிபிரட்டிகளாக கருதுவோர் ஏராளம். அதே சமயத்தில், அதிக ஃபாலோயர்களை வைத்திருக்கும் செலிபிரட்டிகளும் சமூக பொறுப்பின்றி, தேவையற்ற பொருள்களுக்கு விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
யார் எல்லாம் செலிபிரட்டிகள்?
இந்த நிலையில், யார் எல்லாம் செலிபிரட்டி என்பது குறித்து இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் (ASCI) இன்று வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. அரசு சாரா அமைப்பான விளம்பர தர நிர்ணய கவுன்சில், விளம்பரத் துறையின் சுய ஒழுங்குமுறை அமைப்பாக உள்ளது.
இந்த கவுன்சில் வெளியிட்ட விதிகளின்படி, 5 லட்சம் ஃபாலோயர்கள் வைத்திருப்பவர்களே செலிபிரட்டிகளாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விளம்பரங்களில் நடித்து ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் மேல் வருமானம் ஈட்டுபவர்களும் செலிபிரட்டிகளாக கருதப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளது.
இந்த செலிபிரட்டிகள் அனைவரும் இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் விதிகளை பின்பற்றுவது அவசியமாகிறது. ஒரு பிராண்டிற்கு ஒப்புதல் அளிக்க கையொப்பமிடுவதற்கு முன்பு, தகுந்த விதிகளை பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட செலிபிரட்டியை இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் அழைக்கும்போது, அதற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும். அதேபோல, தடை செய்யப்பட்ட பொருள்களுக்கு விளம்பரம் செய்யக்கூடாது.
தடை செய்யப்பட்ட பொருள்களுக்கு விளம்பரம் செய்த செலிபிரட்டிகள்:
இதுகுறித்து ஏஎஸ்சிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "யார் எல்லாம் செலிபிரட்டிகள் என வரையறுப்பது அவசியமாகிறது. ஏனெனில் சமீபத்திய ஆண்டுகளாகவே, வெகுஜன மக்கள் மத்தியில் சமூக ஊடக பிரபலங்கள் செலுத்தும் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
வரலாற்று ரீதியாகவே, பெரும்பாலும் பிரபலமான நடிகர்களும் விளையாட்டு வீரர்களும்தான் குறிப்பிட்ட பிராண்ட்களுக்கு விளம்பரம் தேடி தந்து வந்துள்ளனர். வெகுஜன மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளனர்" என்றார்.
ஆனால், சமீப ஆண்டுகளாகவே, சமூக ஊடக செலிபிரட்டிகள், விதிகளை மீறி விளம்பரம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விவரித்த ஏஎஸ்சிஐ, "விதிகளை மீறுவது வழக்கமாக நடந்து வருகிறது. இதற்கான விதிமுறைகள் அமலில் இருந்தபோதிலும், தவறான விளம்பரங்களில் செலிபிரட்டிகள் நடித்ததாக 500 விளம்பரங்கள் இந்த நிதியாண்டில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக ஏஎஸ்சிஐ தலைமை நிர்வாகியும் பொதுச் செயலாளருமான மனிஷா கபூர் கூறுகையில், "சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான, நுகர்வோரிடம் நெருக்கமான தனிப்பட்ட தொடர்பை கொண்டுள்ள பல செலிபிரட்டிகள் உள்ளனர். இந்த செலிபிரட்டிகளை நம்பும் மக்கள் மீது இவர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே, நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வது இன்றியமையாதது" என்றார்.
இதையும் படிக்க: Jailer Review: ‘தியேட்டரில் தலைவரு அலப்பறை’ .. ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி? .. முதல் விமர்சனம் இதோ..!