நம்பிக்கயில்லா தீர்மானம் மூலம் இந்தியாவில் தற்போது வரை  மூன்று பிரதமர்கள் ஆட்சியை இழந்துள்ளனர்.


மணிப்பூர் விவகாரம்:


மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை பேச வைக்க வேண்டும் என்ற நோக்கில், தோல்வியுறும் என்று தெரிந்தும் காங்கிரஸ் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. அதன் மீது கடந்த இரண்டு நாட்களாக காரசாரமான விவாதம் நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி இன்று பதிலளிக்க உள்ளார். அதைதொடர்ந்து நடைபெற உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பாஜக எளிதில் வெற்றி பெறும் என்பதை நிதர்சனமாக உள்ளது. இந்நிலையில் இந்திய நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம், ஆட்சியை இழந்த பிரதமர்கள் யார் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


பதவியை இழந்த 3 பிரதமர்கள்:


1990ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும்பான்மை ஆதரவை பெற்றதால், பிரதமர் வி.பி. சிங் ஆட்சியை இழந்தார். 1997ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானமும் பெரும்பான்மை ஆதரவையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதால், அப்போது பிரதமராக இருந்த தேவ கவுடா  தனது ஆட்சியை இழந்தார். இதேபோன்று, 1999ம் ஆண்டுகொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது, ஜெயலலிதா தனது ஆதரவை திரும்பப் பெற்றதால் வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் ஆட்சி கலைந்தது. இந்த மூன்று ஆட்சி கலைப்புகளுமே 90-களில் வெறும் 10 ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது.  


27 நம்பிக்கையில்லா தீர்மானங்கள்ள்


கடந்த 1952ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது வரை இந்திய நாடாளுமன்றத்தில் 27 முறை நம்பிக்கையில்லா தீர்மானங்களும், 12 முறை பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.  இந்தியா இதுவரை கண்ட 14 பிரதமர்களில் 8 பேர் நம்பிக்கையிலா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளனர். இதில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தான் நீண்ட நேரம் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது.


முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்:


நாடாளுமன்றத்தின் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம், கடந்த 1963ம் ஆண்டு பிரதமர் நேருவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டது. அது தோல்வியில் முடிந்தது.  தொடர்ந்து, 1964 மற்றும் 1965ம் ஆண்டுகளில், லால் பகதூர் சாஸ்திரியின் ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களும் தோல்வியையே சந்தித்தன. 


தோல்வியை சந்தித்த பிற தீர்மானங்கள்:


இதனிடையே, 1978 மற்றும் 1979ம் ஆண்டுகளில் மொரார்ஜி தேசாய்க்கு எதிராக கொண்டு வரப்பட்ட இரண்டு நம்பிக்கையிலா தீர்மானங்களும் தோல்வியையே சந்தித்தன. 1987ம் ஆண்டு ராஜிவ் காந்திக்கு எதிராகவும், கொண்டு வரப்பட்ட தீர்மானமும் தோல்வியை சந்தித்தது. இதேபோன்று, 1993ம் ஆண்டு நரசிம்ம ராவிற்கு எதிராகவும், 2003ம் ஆண்டு வாஜ்பாயி அரசுக்கு எதிராகவும், 2018ம் ஆண்டு மோடியின் ஆட்சிக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானங்கள் தோல்வியை சந்தித்துள்ளன.


இந்திரா காந்தியின் சாதனை:


நாடாளுமன்றத்தில் இதுவரை கொண்டுவரப்பட்ட 27 நம்பிக்கையில்லா தீர்மானங்களில் 15 தீர்மானங்கள், 16 ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்த இந்திரா காந்தி அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, 1966ம் ஆண்டில் மட்டும் 2 முறையும், 1967 மற்றும் 1968ம் ஆண்டுகளில் தலா 2 முறையும் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 1969, 1970, 1973, 1974ம் ஆண்டுகளில் 2 முறை, 1975, 1981ம் ஆண்டில் இரண்டு முறை மற்றும் 1982 ஆகிய ஆண்டுகளில் இந்திரா காந்திக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அனைத்து முறையும் இந்த தீர்மானங்கள் தோல்வியையே சந்தித்தன.