இணையவாசிகளின் இதயங்களை அள்ளியுள்ளது புலிக் குட்டிகளின் கொஞ்சல் விளையாட்டு.
புலிகள் வளமான வனத்தின் அடையாளம். நம் நாட்டில்தான் உலகின் 75 சதவிகிதத்திற்கும் அதிகமான புலிகள் வாழ்கின்றன. இந்தியாவில் 18 மாநிலங்களில் மொத்தம் 53 புலிகள் காப்பகங்கள் உள்ளன. தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை என மொத்தம் 5 புலிகள் காப்பகங்கள் உள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 2,967 புலிகள் இருப்பதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டது.
1972-ல் நடத்தப்பட்ட முதலாவது அகில இந்தியப் புலிகள் தொகைக் கணக்கெடுப்பில் வெறும் 1,872 புலிகளே மிஞ்சி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அழிவின் விளிம்பில் இருந்த புலிகள் இனத்தை பாதுகாக்க 1973-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் புராஜெக்ட் டைகர் (Project Tiger) என்னும் திட்டம் தொடங்கப்பட்டது. 1986-ல் இருந்து பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் புலி அருகிய இனமாக அறிவிக்கப்பட்டது. புலிகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டதாலும், காப்பகங்கள் உள்ளிட்ட அரசின் தொடர் நடவடிக்கைகளாலும் புலிகளின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்தன. எனினும், நூற்றுக்கணக்கான புலிகள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றன.
இந்நிலையில் புலிகள் பாதுகாப்பின் அவசியம் பற்றி அரசு அவ்வப்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தற்போது, நாடு முழுவதும் 50 புலிகள் சரணாலயங்கள் எற்படுத்தப்பட்டன. இருப்பினும், இந்தியாவில் உள்ள புலிகளில் சுமார் 30சதவீதம், புலிகள் சரணாலயங்களுக்கு வெளியே தான் வாழ்ந்து வருகின்றன.
சுவாரஸ்ய வீடியோ:
சரி நாம் வீடியோவுக்கு வருவோம். இந்த வீடியோவை மத்தியப் பிரதேசத்தின் டைகர் ஃபவுண்டேஷனில் வேலை செய்யும் ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்த நந்தா பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ 20 விநாடிகள் தான் ஓடுகின்றன. அதில் இரண்டு புலிக்குட்டிகள் பாய்ந்து ஒன்றோடு ஒன்று கட்டிப் புரண்டு விளையாடுகின்றன. அந்த வீடியோவைப் பகிர்ந்த ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்த நந்தா, இரண்டு புலிக் குட்டிகள் துள்ளி விளையாடுவதைக் கண்டேன். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே காப்பகத்தில் புலிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவே கருதப்பட்டது. இன்று இன்று 45 முதல் 50 பெரிய புலிகளும், 20 முதல் 25 குட்டிப் புலிகளும் உள்ளன. இது புலிகள் பாதுகாப்பில் வனத்துறை கொண்ட தளராத முயற்சிகளின் சாட்சி என்று பதிவிட்டுள்ளார்.
சுசாந்த நந்தா அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் பல சுவாரஸ் வனவிலங்கு வீடியோக்களைப் பகிர்வது வழக்கம். அந்த வகையில் அவர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.