லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தைக் கண்டித்தும் அதற்கு காரணமான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி லக்னோவில் மவுன விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அஜய் மிஸ்ரா பதவியில் நீடித்தால் நியாமான வழக்கு விசாரணை நடைபெறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அஜய் மிஸ்ராவுக்கு ஆதரவளிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். அங்கு பாஜகவின் ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள், இளைஞர்கள், பட்டியலின மக்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாஜக அரசு மீது அதிருப்தியில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் யோகி ஆதித்யநாத் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வது கடினம் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் லக்கிம்பூர் விவசாயிகளின் குடும்பங்களைக் காணச்சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். அந்த சம்பவத்தையடுத்து யோகி ஆதித்யநாத் ஒரு கோழை என குறிப்பிட்டார் பாகெல். பாஜக மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பதாக குற்றம்சாட்டினார். பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து பாஜக அதைக் கற்றுக்கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னதாக 2017ம் ஆண்டு தேர்தலின்போது பாஜக 309 தொகுதிகளை வென்றது. அப்போது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 18 இடங்களையும், மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி 49 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 7 இடங்களையும் வென்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்