தமிழ்நாடு
காஞ்சிபுரத்தில் பெண்ணிடம் நகையை பறித்து விட்டு தப்பியோடி தலைமறைவான கொள்ளையர்களை காவல்துறையினர் பிடித்துள்ளனர். ஒரு கொள்ளையனை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்ற போலீசார் மற்றொரு கொள்ளையனை கைது செய்தனர். 10 தனிப்படை அமைத்து பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு காவல்துறையினரிடம் கொள்ளையர்கள் பிடிபட்டது தெரியவந்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த இரு வீராங்கனைகளுக்குத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்துக்கான பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தீபாவளிப் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் வகையில் சென்னை மற்றும் மற்ற நகரங்களில் இருந்து 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை 3 மடங்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெங்களூரு தக்காளியின் விலை கிலோ 70 ரூபாயாக அதிகரித்துள்ளது.
தமிழகத்திற்கு தேவையான அளவு நிலக்கரி வந்துகொண்டிருக்கிறது. விவசாயத்திற்கு தேவையான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் ஒரு நொடி கூட மின்வெட்டு ஏற்படாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய திருநெல்வேலி பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள், 74 மையங்களில் நாளை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் நாம் தமிழர் கட்சியின் யூடியூபர் சாட்டை துரைமுருகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். வரும் அக்டோபர் 13ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியா
விண்வெளி பணிகள் தொடர்பான சாதனங்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் இணைந்து, ‛இந்திய விண்வெளி சங்கம்' என்ற அமைப்பை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதாகவும், அதனால் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வரதட்சணைக்காக மனைவியை விஷப்பாம்புகளை ஏவிக்கொன்ற கணவன் குற்றவாளி என கொல்லம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. தண்டனை விவரங்கள் அக்டோபர் 13ம் தேதி அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
பொழுதுபோக்கு
ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படத்தின் டீசர் வருகிற அக்டோபர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவின் மூத்த நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக் குறைவால் காலமானார்.
உலகம்
தொழிலாளர்களின் பொருளாதாரம் குறித்த பங்களிப்பிற்காக அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட், ஜோஸ்வா டி ஆங்க்ரிஸ்ட் மற்றும் கெய்டோ டபிள்யூ. இம்பென்ஸ் ஆகிய மூவருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் இணைக்கும் சீனாவின் நடவடிக்கையை ஏற்க முடியாது என தைவான் அதிபர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.