சீரம் இன்ஸ்ட்டியூட் நிறுவனத்தலைவரும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியாளருமான அதார் பூனாவாலாவுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணிகள் வரும் 1 மே மாதத்தில் தொடங்க இருப்பதால் இந்த பாதுகாப்பு தரப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பிரிவு பாதுகாப்பின்படி அதார் பூனாவாலா இந்தியாவின் எந்த ஊருக்குச் சென்றாலும் 11 பேர் அடங்கிய குழு அவருக்குப் பாதுகாப்பாக இருக்கும். இதில் இரண்டு கமாண்டோக்கள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரியும் அடக்கம்.




கோவிஷீல்ட் தடுப்பூசி மற்ற நாடுகளில் விற்கப்படும் விலையுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக அண்மையில் தீவிர விமர்சனத்தை எதிர்கொண்டார் அதார். இதையடுத்து மாநிலங்களுக்கு விற்கப்படும் தடுப்பூசி ஒன்று 400 ரூபாய் என்று இருந்தது 300 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. தடுப்பூசி விலைக்குறித்த அந்த நிறுவனத்தின் அறிவிப்பில் மற்ற எந்த நாடுகளின் தடுப்பூசியையும் விட தங்களது தடுப்பூசியின் விலை மிகமிகக் குறைவு எனவும் நல்லெண்ண அடிப்படையில் மத்திய அரசுக்கு முதல் ஒரு பில்லியன் தடுப்பூசி ஒரு மருந்தின் விலை 150 ரூபாய் என்கிற அடிப்படையில் விற்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். தடுப்பூசி விலை குறித்து தொடர் சர்ச்சை எழுந்ததை அடுத்து அவருக்குத் தற்போது இந்தப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  

Also Read: கொரோனா பாதிப்பு டூ ‛ருது’ர தாண்டவம்-யார் இந்த ருதுராஜ் கெய்க்வாட்?