புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII)நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) ஆதார் பூனவல்லா பேரில் ஒரு கோடி ரூபாய்க்கு சைபர் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உலகிலேயே அதிக அளவு தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள முக்கிய கோவிட்-19 தடுப்பூசியான கோவிஷீல்டை, மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் இயங்கில் வரும் இந்நிறுவனம் தான் உற்பத்தி செய்கிறது.


இவ்வளவு பெரிய சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பெயரை உபயோகித்து முன்னதாக நடைபெற்றுள்ள சைபர் மோசடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 






சீரம் நிறுவனத்தின் நிதி மேலாளர் சாகர் கிட்டூர் இந்த மோசடி குறித்து முன்னதாக புகார் அளித்ததன் அடிப்படையில் பண்ட்கார்டன் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இயக்குனர் சதீஷ் தேஷ்பாண்டேவுக்கு பூனவல்லாவின் எண்ணில் இருந்து ஒரு சில வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றும்படி வாட்ஸ்அப் செய்தி வந்ததாகவும், அதன்படி, அந்த நிறுவனத்தின் கணக்கில் இருந்து குறிப்பிட்ட் கணக்குகளுக்கு ரூ.1,01,01,554 மாற்றப்பட்டதாகவும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


 






இந்நிலையில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி பிரிவுகள் 419 (நபர் மூலம் ஏமாற்றுதல்), 420 (ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்துக்களை பெறுதல்)மற்றும் 34 (பொது நோக்கம்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


குற்றம் சாட்டப்பட்டவர்கள், வாட்ஸ்அப் செய்தியை அனுப்பியவர்கள் மற்றும் பணம் மாற்றப்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆகியோரைக் கண்டறிந்து கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.