அதானி குழுமம் விதிகளை மீறவில்லை என நிபுணர் குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. எனினும் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாவதற்கு முன்பாக அதானி குழும பங்குகளில் சர்ச்சைக்குரிய வகையில் வர்த்தகத்தில் ஈடுபட்ட 4 முதலீட்டாளர்கள் உட்பட 6 நிறுவனங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும், அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்திருந்தது. இந்திய அரசியலில் இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், அதானி நிறுவன பங்குகள் கடுமையாக சரிந்தன.
முதல்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல்
அதானி நிறுவனம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் குழுவை அமைத்தது. இந்த குழு ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அதில் அதானி குழு பங்கு மதிப்பை உயர்த்திக் காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, செபி அளித்த புள்ளி விவரங்களுடன் கூடிய விளக்கத்தை பரிசீலிக்கும்போது, இதில் பங்குச்சந்தை ஒழுங்காற்று முறையில் தோல்வி ஏற்பட்டுள்ளதா என்பதை முடிவு செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்டது.
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பாக அதானி குழும பங்குகள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 4 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உட்பட 6 நிறுவனங்களின் வர்த்தக முறை சந்தேகத்திற்குரிய வகையில் உள்ளது என்றும், தங்களுக்கு சொந்தம் இல்லாத அதானி பங்குகளின் மதிப்பை இந்த நிறுவனங்கள் உயர்த்திக்காட்டி வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.
ஹிண்டன்பர்க் அறிக்கை ஜனவரி 24-ஆம் தேதி வெளியான நிலையில், அதானி குழும பங்கு வர்த்தகத்தின் மூலமாக இந்த 6 நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்டியுள்ளன. எனவே இந்த 6 நிறுவனங்களின் வர்த்தக முறை குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை நிலுவையில் இருப்பதால் இந்நிறுவனங்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
மேலும், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பாக அதானி குழும பங்குகள் வர்த்தகத்தில் சட்ட விரோத பண பரிவர்த்தனைகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்பது உளவுத்துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இதுவும் இந்திய பங்கு சந்தைகளின் ஒருங்கிணைந்த ஸ்திரத்தன்மை மீதான குற்றச்சாட்டுகளுக்கு வழி வகுத்திருக்கலாம். இதனால், இது குறித்து பங்கு பரிவர்த்தனை விதிகளின் கீழ் செபி விசாரிக்க வேண்டும் என்றும் நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.