அதானி குழுமம் போலி நிறுவனங்கள் மூலம், வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் பெறுவதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையாக மாறி நாடாளுமன்றத்தில் பெரும் விவாதமாகவும் வெடித்தது.
செபி தலைவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள்: பங்குச்சந்தைகள் பெரும் இழப்பை சந்தித்தன. அந்த பிரச்னை சற்றே ஓய்ந்திருக்கும் நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவனம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”அதானி குழும முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் தலைவர் மாதபி புச்-க்கு சொந்தமான பங்குகள் இருந்தன.
முறைகேட்டில் உடந்தை என்பதனாலேயே அதானி முழுமம் மீது செபி தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை” என ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு செபி தலைவர் மறுப்பு தெரிவித்து இருந்தார். அதானி குழுமமும் மறுப்பு தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தியின் அடுக்கடுக்கான கேள்விகள்: இந்த நிலையில், ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்துவதோடு சிறிய முதலீட்டாளர்களின் செல்வத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் செபி நிறுவனம், அதன் தலைவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளால் நேர்மையை இழந்துவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், "நாடு முழுவதும் உள்ள நேர்மையான முதலீட்டாளர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தமான கேள்விகளைக் கொண்டுள்ளனர்:
- செபி தலைவர் மாதவி புரி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?
முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால், யார் பொறுப்பேற்பார்கள்? பிரதமர் மோடியா, செபி தலைவரா அல்லது கௌதம் அதானியா?
- புதிய மற்றும் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தை மீண்டும் ஒருமுறை தானாக முன்வந்து விசாரிக்குமா?
ஜேபிசி விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என்பதும், அதன் மூலம் என்ன தெரியவரும் என்பதும் இப்போது தெளிவாகத் தெரிகிறது" என பதிவிட்டுள்ளார்.