தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பழமையான தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றான சங்கர நாராயணசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் பல்வேறு சிறப்புகள் உள்ளது. அதுவும் சிவன் மற்றும் நாராயணர் என இருவரும் ஒரே ரூபத்தில் பாதிப்பாதியாக காட்சி அளிப்பது வேறெங்கும் இல்லாத சிறப்பாகும். இந்த சூழலில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி இக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். குறிப்பாக அங்குள்ள சங்கரலிங்க சுவாமி கோமதி அம்பாள் சங்கரநாராயணர் ஆகிய சன்னதிகளில் தனது பெயரில் அர்ச்சனை செய்து ஆத்மார்த்தமாக வழிபாடு செய்தார். பின்னர் சமுத்திரக்கனி திருக்கோயிலை சுற்றி வந்து தரிசனம் மேற்கொண்டார், அப்போது அங்குள்ள யானை கோமதியிடம் ஆசி பெற்றார்.
தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார் என்பதை அறிந்த பக்தர்களும், அவரது ரசிகர்களும் அவரை காண கோயிலுக்குள் குவிந்தனர். இதனை அறிந்த காவல்துறையில் கூடுதல் பாதுகாப்பை பலப்படுத்தினர். தொடர்ந்து கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் சமுத்திரக்கனியுடன் செல்பி எடுத்துக் கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் பொழுது, “இத்தனை வருடத்தில் இந்த கோயிலுக்கு நான் வந்ததில்லை. இப்போது தான் முதன்முறையாக வந்துள்ளேன். திடீரென தோன்றியதால் வந்தேன். இது மிகவும் அற்புதமான கோயில். சிவனும், விஷ்ணுவும் ஒன்றாக இருக்கக்கூடிய இடம். ரொம்ப நல்ல தரிசனம். மனதிற்கு ரொம்ப அமைதியாக இருக்கிறது” என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் தமிழ் சினிமாவில் நல்ல கருத்துள்ள படம் கொடுத்து வரும் உங்களிடம் இன்னும் அதனை எதிர்ப்பார்க்கலாமா என்று கேட்ட போது, நிறைய வரும். எழுதிக்கொண்டு தான் இருக்கிறோம். அதற்கான காலம் வரும் பொழுது வெளிவரும் என்றார். அதே போல வருங்கால பெண்கள், இளைஞர்களுக்கு சொல்ல விரும்புவது என கேட்ட போது, அவர்கள் நல்லா இருக்காங்க. தெளிவாக இருக்கிறார்கள் என்றார். மேலும், சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்களை வரவேற்கிறீர்களா அல்லது எப்படி பார்க்கிறீர்கள் என கேட்ட போது, வரட்டும். ஜனங்களிடம் இருந்து தானே நிறைய வாங்கியிருக்காங்க. ஜனங்களுக்கு கொடுக்கனும்னு ஆசைப்படுறாங்க கொடுக்கட்டும் என்று கூறினார்.