அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தகோரும் மனுவை வரும் வெள்ளிக் கிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 


குற்றச்சாட்டு


அமெரிக்காவை சேர்ந்த  ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் கடந்த 2 அண்டுகளாக, அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், அதிகாரிகள், பங்குதாரர்கள் என பலரிடம் கருத்துக்களைக் கேட்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, ”அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகள் செய்துள்ளது.  ரூ.17.80 லட்சம் கோடி மதிப்பிலான தொகைக்கு அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்து, பங்குகளை திருத்தியுள்ளது” என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 


இந்த அறிவிப்பு வெளியானதும் அதானி குழுமத்தை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் பங்குச்சந்தை மதிப்புகள், சரசரவென வீழ்ச்சி கண்டன. அதன்படி, அதானி குழுமத்தினை சேர்ந்த அதானி டோட்டல் கேஸ், எண்டர்பிரைசஸ், டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, போர்ட்ஸ், பவர் மற்றும் அதானி வில்மர் ஆகிய 7 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.


ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள்


 ஹிண்டன்பர்க்கின் அறிக்கையில், ”அதானியின் சொத்து மதிப்பு பெரும்பாலும் பங்குகளின் உயர்வால் கடந்த 3 ஆண்டுகளில் ஈட்டியதாகும். இந்த காலகட்டத்தில் அதானி குழுமத்தின் மேலே குறிப்பிட்ட 7 நிறுவனங்களின் பங்குகளும் 819 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கு மதிப்பு மட்டும் 125 சதவிகிதம் உயர்ந்தது, அதானி பவர், சமையல் எரிவாயு ஆகியவற்றின் பங்குகள் 100 சதவீதம் உயர்ந்தன. கரீபியன் நாடுகள்,மொரிஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதானி குழுமம் பல்வேறு போலி நிறுவனங்களை நடத்தி வருகின்றன. அதானி குழுமத்துடன் கடன் அளவுக்க அதிகரித்துக் கொண்டே இருப்பது, முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கடந்தாண்டு  மார்ச் மாதம் முடிவில் அதானி நிறுவனத்தின் கடன் 40 சதவீதம் உயர்ந்து,  ரூ. 2.20 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த அறிக்கையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய பங்குச்சந்தைகள், அரசியல் வட்டாரங்களை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதானி குழும விவகாரம் நாடாளுமன்றத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இரு அவைகளில் உள்ள எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டனர்.


மனு


இந்நிலையில், அதானி நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ்  விசாரணை நடத்தக்கோரிய இரண்டு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த  மனு மீதான வரும் வெள்ளிக்கிழமை (நாளை) விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் வகையில், ஹிண்டன்பர்க் அறிக்கை ஒரு சதித்திட்டத்தை தீட்டியதாக குற்றச்சாட்டை முன்வைத்து, வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா மற்றும் விஷால் திவாரி ஆகியோர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 


 இந்த வழக்கை நீதிபதி சந்திரசூட், நரசிம்மா பர்திவாலா கொண்ட அமர்வு நாளை விசாரிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், நீதிமன்றத்தின் தலையீடு எந்தவகையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.