மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் சர்வதேச புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் ஏராளமான மக்கள் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தனர். அப்போது அங்கிருந்த சிலர் தங்களின் பர்ஸ் மற்றும் பணத்தை காணவில்லை என்று புகார் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, இதுதொடர்பாக உடனே காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்து காவல்துறையினர் நடத்திய சோதனையில், 30க்கும் மேற்பட்டோரின் பர்ஸ்கள் காணாமல் போயிருந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து புத்தக கண்காட்சி நடந்த மைதானத்தில் மெயின் கதவை மூடிய காவல்துறையினர், அங்கிருந்த அனைவரது உடமைகளையும் பரிசோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் நடந்து கொண்ட டி.வி நடிகை ரூபா தத்தா, திடீரென்று குப்பைக்கூடையில் எதையோ போட்டு மறைத்துக் கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். உடனே குப்பைக்கூடையை பரிசோதித்தபோது, அதில் ஏராளமான பர்ஸ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடிகை ரூபா தத்தா வைத்திருந்த கைப்பையை வாங்கி காவல்துறையினர் பரிசோதனை செய்ததில், அதில் 10க்கும் மேற்பட்ட பர்ஸ்கள் மறைத்து வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வசமாக சிக்கிக்கொண்ட அவரிடம் இருந்து 65,760 ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. பிறகு அத்தொகை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
காவல்துறையினர் தொடர்ந்து நடிகையிடம் விசாரித்ததில், இது போன்ற திருட்டுகளை நடிகை ரூபா தத்தா பல்வேறு இடங்களில் பல மாதங்களாக செய்து வந்ததை கண்டுபிடித்தனர். எந்தெந்த இடங்களில் எவ்வளவு ரூபாய் திருடினோம் என்பதை குறித்து வைக்க அவர் டைரி ஒன்றை பராமரித்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. புத்தக கண்காட்சியில் நடிகை திருடிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டு, இன்று கொல்கத்தா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்