Supreme Court : மனிதக்கழிவை மனிதர்களே அள்ளும் அவலம்..முடிவுக்கு கொண்டு வர என்னதான் செய்தீர்கள்?..மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி..!

10 ஆண்டுகளுக்கு முன்பே, சஃபாய் கரம்சாரி வழக்கில் இந்த முறையை உச்ச நீதிமன்றம் தடை விதித்தபோதிலும் மனித கழிவை மனிதர்களே அள்ளும் அவலம் தொடர்ந்து வருகிறது.

Continues below advertisement

மனித கழிவை மனிதர்களே அள்ளும் அவலம் தொடர்ந்து வருவது நம் சமூகம் தோல்வி அடைந்ததையே காட்டுகிறது. மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் போன்ற காரணங்களை காட்டி பாகுபாடு காட்டுவது அரசியலமைப்பு சட்டப் பிரிவு 15இன் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement

மனித்தை கேள்விக்குள்ளாகும் முறை:

ஆனால், மனித கழிவை மனிதர்களே அள்ளும் அவல தொழிலில் சாதியின் அடிப்படையில் ஆட்களை பணி அமர்த்துவது மனிதத்தையே கேள்விக்குள்ளாக்கும் விதமாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பே, சஃபாய் கரம்சாரி வழக்கில் இந்த முறையை உச்ச நீதிமன்றம் தடை விதித்தபோதிலும் மனித கழிவை மனிதர்களே அள்ளும் அவலம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், டாக்டர் பால்ராம் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2014ஆம் ஆண்டு தடைக்கு பிறகு, மனித கழிவை மனிதர்களே அள்ளும் முறையை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்களை கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். ரவிந்திர பட் தலைமையிலான அமர்வு, மனித கழிவை மனிதர்களே அள்ளும் முறைக்கு தடை விதித்ததை தொடர்ந்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக ஆறு வார காலத்திற்குள் சமர்பிக்க உத்தரவிட்டது. 

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடையில் இறங்குவது குற்றம்:

அவசர கால சூழ்நிலைகளில் கூட பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடையில் இறங்குவது குற்றம் என குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், இந்த அவல முறையில் எதிர்கால சந்ததியினர் ஈடுபடாதவாறு இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையாக சமர்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கையால் மலம் அள்ளுபவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் உலர் கழிப்பறைகள் (தடை) சட்டம் 1993, கையால் மலம் அள்ளுவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம் 2013, ஆகிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டதன் மூலம் இந்த முறைக்கு தடை விதிக்கப்பட்டது. 

தொடரும் அவலம்:

இருப்பினும், இந்த முறை தொடர்ந்து வருவதையும் சாக்கடை கால்வாய்களில் சிக்கி மக்கள் பலியாவதையும் கருத்தில் கொண்ட நீதிபதிகள், மத்திய சமூக நீதி மற்றும் மேம்படுத்தல் துறை அமைச்சகம், பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையம், பழங்குடியினர்களுக்கான தேசிய ஆணையம் ஆகியவை பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவிடும் வகையில் வழக்கறிஞர் கே. பரமேஸ்வரை நீதிமன்றம் நியமித்துள்ளது. சமூக நீதித்துறை அமைச்சகம் ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சஃபாய் கரம்சாரி வழக்கின் 2014 தீர்ப்பின்படி, கையால் மலம் அள்ளுபவர்களுக்கு பண உதவி, அவர்களுக்கான வீடுகள், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வாழ்வாதாரத் திறன் பயிற்சி, அவர்களுக்கு நிதியுதவி அளிக்க சலுகைக் கடன் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சாக்கடையில் இறங்கி மரணம் அடைந்தால் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. ரயில் தண்டவாளங்களில் கையால் மலம் அள்ளும் முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வியூகத்தை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வகுக்க வேண்டும் என்றும் ரயில்வேக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

Continues below advertisement