10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலை அடுத்து, சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. 


சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 5ம் தேதி முடிவடைகின்றன. பிப்ரவரி 15ஆம் தேதி தொழில் முனைவோர் பாடத்துடன் பொதுத் தேர்வு தொடங்கியது. அதையடுத்து, பயோடெக்னாலஜி, பொறியியல் வரைபடம், மின்னணு தொழில்நுட்பம், சுருக்கெழுத்து, உணவு ஊட்டச்சத்து உள்ளிட்ட தேர்வுகள் பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெற்றன. ஏப்ரல் 5ஆம் தேதி உளவியல் பாடத்துடன் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிகிறது. 


10ஆம் வகுப்பு அட்டவணை


அதேபோல 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிவடைகின்றன. குறிப்பாக 10ஆம் வகுப்புபொதுத் தேர்வு ஓவியம் உள்ளிட்ட கலை படிப்புடன் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 24ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிப் பாடங்கள் நடந்தன. 27ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது.


மார்ச் 1, 2ஆம் தேதிகளிலும் பல்வேறு மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்க உள்ளது. மார்ச் 4ஆம் தேதி அறிவியல் பாடத் தேர்வும்  மார்ச் 15-ல் சமூக அறிவியல் தேர்வும் நடக்கின்றன. மார்ச் 21ஆம் தேதி கணிதப் பாடத்துடன் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிகின்றன. 


10, 12ஆம் வகுப்புக்கான தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரையிலும், சில தேர்வுகள் 1.30 மணி வரையிலும் நடைபெற்று வருகின்றன. முன்னதாக செய்முறை தேர்வுகள் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்றன. கேள்வித் தாளை வாசித்துப் பார்ப்பதற்காக மாணவர்களுக்கு 15 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது. 




சிபிஎஸ்இ விளக்கம்


இந்த நிலையில் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகத் தகவல் வெளியானது. அதை அடுத்து, உண்மைத் தன்மை குறித்து சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு சிபிஎஸ்இ சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:


''யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக வலைதளங்களில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு வினாத் தாள்கள் கசிந்துள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நபர்கள், குழுக்கள் அல்லது நிறுவனங்கள் சேர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பணம் கேட்டு மிரட்ட இதைச் செய்ய முயலலாம். 


இத்தகைய பொறுப்பற்ற செயல்பாடுகள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் குழப்பம் மற்றும் பயத்தை ஏற்படுத்தும். 


இதுகுறித்து டெல்லி காவல்துறை சிறப்பு மையத்திடம் (MAC) புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலி செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது ஐ.பி.சி. மற்றும் ஐ.டி. சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல வதந்தி செய்திகளைப் பரப்பும் மாணவர்கள் மீதும் ஐ.பி.சி. சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. 


பெற்றோர்களும் இத்தகைய வதந்திகளைப் பரப்புவோரை நம்ப வேண்டாம் என்றும் பொதுத் தேர்வு சுமுகமாக நடக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் எனவும் தங்களின் மகன்கள்/ மகள்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்''. 


இவ்வாறு சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 


10ஆம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.