சந்திரயான் 3 விண்கலத்தை கிண்டல் செய்து நடிகர் பிரகாஷ் ராஜ் டிவிட்டரில் கார்ட்டூன் பதிவிட்டதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.  நடிகர் பிரகாஷ் ராஜ், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட  தென்னிந்திய மொழி திரைப்படங்களில், முன்னணி கதாபாத்திரங்களில்  நடித்து வருகிறார். அவர் சினிமாவில் மட்டுமின்றி, அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


பாஜக-வுக்கு எதிராகவும் பேசி, சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிரகாஷ் ராஜ்,  டிவிட்டரில் கார்ட்டூன் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ஒருவர் டீ ஆற்றுவது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, நிலவில் இருந்து வரும் முதல் புகைப்படம் என்று பதிவிட்டுள்ளார். 






சர்ச்சை கார்ட்டூன்:


இதை பார்த்த சிலர் இந்த கார்ட்டூன் சந்திராயன் 3 விண்கலத்தை ட்ரோல் செய்யும் விதமாக உள்ளதாக இணையத்தில் கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர். இந்தியர்கள் பெருமைப்படும் ஒரு விஷயத்தை, சமூகத்தில்  சிறந்த அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இவ்வாறு கிண்டல் செய்வது ஏற்புடையது அல்ல என்று, அவரை கடுமையாக கண்டித்து,  பலர் பதிவுகள் வெளியிட்ட வண்ணம் இருந்தனர். இது குறித்து அவர் விளக்கம் அளிக்கும் விதமாக டிவிட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். 





 

அதில் " வெறுப்பு வெறுப்பை மட்டுமே பார்க்கும். ஆம்ஸ்ட்ராங் காலத்து நகைச்சுவையினை கூறியிருந்தேன். கேரள டீக்கடைக்காரரை கொண்டாடியுள்ளேன். எந்த டீ விற்பவருக்கு இது கேலியாக தெரிவிகிறது? நகைச்சுவை புரியவில்லை என்றால் நீங்கள் தான் நகைச்சுவையே. வளருங்கள். என பதிவிட்டுள்ளார்.

 

வழக்குப்பதிவு:

 

இந்நிலையில் சந்திரயானை கேலி செய்து பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக இந்து அமைப்புகளின் தலைவர்கள் அவர் மீது புகார் அளித்தனர். பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பனஹட்டி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட  புகாரில்,  நடிகர் பிரகாஷ் ராஜை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்த  போலீசார்,  தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

 

மேலும் இது குறித்து நடிகர் அபூர்வ் குப்தா தெரிவித்துள்ளதாவது : "வெறுப்பதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், நீங்கள் ஒருவரை வெறுக்க ஆரம்பித்தால், இறுதியில் உங்கள் வெறுப்பு அதிகமாகி , நீங்கள் அனைவரையும் வெறுக்க ஆரம்பிக்கிறீர்கள். சித்தாந்தம் மற்றும் தேசிய சாதனை ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை நீங்கள் மறந்துவிட்டீர்கள். எல்லாமே ஒரே மாதிரியாகத் தெரிகிறது. ஒரு திறமையான நடிகரின் நடத்தையைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.  

 

மேலும் படிக்க