தெலுங்கு திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக துள்ளலான நடிப்பாலும், அசத்தலான நடந்தாலும், மிரள வைக்கும் ஆக்ஷன் காட்சிகளாலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் பின்னால் வைத்துள்ளவர் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இந்த ஸ்டார் ஹீரோ இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


சிரஞ்சீவியின் பிறந்தநாளான இன்று அவரின் சினிமா வட்டத்துக்குள் இருக்கும் நட்புறவு குறித்து பார்க்கலாம். டோலிவுட் சினிமா கொண்டாடும் இந்த ஸ்டார் நடிகர் மற்ற மொழி திரைத்துறையின் ஸ்டார் நடிகர்களுடன் நல்ல உறவை இன்று வரை மெயின்டெய்ன் செய்து வருகிறார். சல்மான் கான், ரஜினிகாந்த், மோகன்லால் என எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் அனைவருடனும் நல்ல நட்பை கொண்டுள்ளார்.


சமீபத்தில் சிரஞ்சீவி கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் அவருக்கும் சல்மான் கான், ரஜினிகாந்த் இருவருக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை மற்றும் வேறுபாடுகள் குறித்து சுவாரசியமாக பேசியிருந்தார்.


 



குறும்புக்கார சல்மான் :


"தம்ஸ் அப் விளம்பரத்தில் இணைந்து நடித்ததன் மூலம் சல்மான் கானுடன் நட்பு பலப்பட்டது. அவர் ஒரு நல்ல மனிதர். நான் மும்பைக்கு செல்லும் போதெல்லாம் அவருடைய வீட்டுக்கு என்னை அழைத்து நன்றாக உபசரிப்பார். நாங்கள் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டு இருந்தாலும் நாங்கள் இருவரும் நன்றாக பழகிக்கொள்வோம். என்னுடைய ஆளுமை மற்றும் பழகும் விதம் அவருக்கு பிடித்ததால் நாங்கள் இருவரும் நெருக்கமாகிவிட்டோம். இருந்தாலும் அவரை போல நான் குறும்புக்காரன் அல்ல" என்று கூறியிருந்தார் சிரஞ்சீவி. 


ரஜினிகாந்த் - சிரஞ்சீவி நட்பு :


மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசுகையில் " ரஜினி மிகவும் மென்மையானவர். தன்னடக்கம் கொண்டவர். எல்லாவற்றிற்கும் மிகவும் உணர்ச்சிவசப்படுவார். இருவருமே ஒரே மாதிரியான மாஸ் ஆக்ஷன் ஹீரோக்கள் என்ற இமேஜை கொண்டு இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்" என கூறியிருந்தார். 


 



அரசியல் பிரவேசம் :


2007ம் ஆண்டு வெளியான "சங்கர் தாதா ஜிந்தாபாத்" திரைப்படத்திற்கு பிறகு முழுமையாக அரசியலில் குதித்த சிரஞ்சீவி சினிமாவில் இருந்து விலகினார். தற்போது மீண்டும் நடிப்பில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் போலோ ஷங்கர் படம் வெளியாகியிருந்தது. மகன் ராம் சரண் நடிக்கும் "புரூஸ் லீ" படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.  


நடிப்பில் ரீ என்ட்ரி :


மீண்டும் அவர் நடிப்பில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளதால் அவரின் ரசிகர்கள் பேரானந்தத்தில் உள்ளனர். சோஷியல் மீடியா மூலம் திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.