இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத் தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. 


சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி திரையுலகை அதிர வைப்பது மட்டும் இன்றி, அரசியலில் பரபரப்பான கருத்தை கூறி நெட்டிசன்களுக்கு கன்டென்ட் தந்து வருகிறார். இவர் நடித்து வெளியான சந்திரமுகி 2 திரைப்படம், வரவேற்பு பெறாத நிலையில், தேஜஸ் திரைப்படும் படுதோல்வி அடைந்துள்ளது.


சினிமா துறையை தொடர்ந்து அரசியலில் கால் பதிக்க உள்ள கங்கனா:


பாஜகவின் தீவிரமாக ஆதரவாளராக உள்ள இவர், சினிமா துறையை தொடர்ந்து அரசியலில் கால் பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் துவாரகாதீசர் கோயிலுக்கு சென்ற இவரிடம், செய்தியாளர்கள் சில கேள்விகளை முன்வைத்தனர். வரவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கங்கனா, "பகவான் கிருஷ்ணர் ஆசிர்வதித்தால் நான் போட்டியிடுவேன்" என்றார்.


"600 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு அயோத்தியில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதை சாத்தியப்படுத்தியதற்காக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான மத்திய அரசை பாராட்டுகிறேன். பாஜக அரசின் முயற்சியால், 600 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு இந்தியர்களாகிய நாம் இந்நன்னாளை காணவிருக்கிறோம். வெகு விமரிசையாக கோவிலை நிறுவுவோம். சனாதன தர்மத்தின் கொடி உலகம் முழுவதும் பறக்க வேண்டும்" என கங்கனா தெரிவித்துள்ளார்.


ஹேமமாலினி தொகுதியை குறிவைக்கிறாரா கங்கனா?


தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "துவாரகை ஒரு தெய்வீக நகரம் என்று நான் எப்போதும் சொல்வேன். இங்கு இருக்கும் அனைத்தும் எனக்கு ஆச்சரியம் தருகிறது. பகவான் துவாரகாதீசர் ஒவ்வொரு துகளிலும் உள்ளார். நாம் அவரைக் காணும்போது பாக்கியவான் ஆகின்றேன். இயன்றவரை இங்கு வந்து இறைவனை தரிசனம் செய்ய முயற்சிப்பேன். வேலையிலிருந்து சிறிது நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் வருவேன்.


நீரில் மூழ்கியிருக்கும் துவாரகை நகரை மேலே இருந்து பார்க்க முடியும். நீருக்கடியில் சென்று எச்சங்களை பார்க்கும் வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு கிருஷ்ணரின் நகரம் சொர்க்கம் போன்றது" என்றார்.


பிரபல இந்தி நடிகை ஹேமமாலினி, கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களில் பாஜகவின் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒன்றான மதுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில், இந்த முறை, கங்கனாவை களமிறக்க பாஜக திட்டமிட்டு வருவதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.