குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 135 பேர் உயிரிழந்தது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத் அரசை கடுமையாக சாடியுள்ளார்.
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் கேபிள் தொங்கு பாலம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் சாலை மேம்பாலம் இடிந்து விழுந்து பலர் உயிரிழந்ததற்கு மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசு குறித்து பிரதமர் மோடி குறை கூறியிருந்தார் என அந்த சம்பவத்தை மேற்க்கோள் காட்டி ட்வீட் செய்த திக்விஜய் சிங் தற்போது நடந்திருக்கும் மோர்பி பால விபத்து கடவுளின் செயலா அல்லது மோசடி செயலா? என பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். என தெரிவித்தார்.
மேலும் அவர் “ஆறு மாதங்களாக பாலம் பழுதுபார்க்கப்பட்டது. ஆனால் திறக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு இடிந்து விழுந்துள்ளது. 27 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் குஜராத்தில், இந்த ஆண்டு ஜூலை மாதம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பித்ரா கிராமத்தில் முதல் நாள் சோதனையின் போது நர்மதா கால்வாய் உடைந்தது. அதே நேரத்தில் புஜில் ஒரு மேம்பாலம் கட்ட 8-9 ஆண்டுகள் ஆனது. இந்த பாலம் ஒரு வருடத்திற்குள் சரிசெய்யப்பட வேண்டும் ” என்று சிங் கூறினார்.
கேபிள் தொங்கு பால இடிந்து விழுந்த நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ராணுவம், கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.ஃபேன்ட் தீயணைப்பு படையினர் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநில முதல்வர் பூபேந்திர படேல் நிலைமையை கண்காணித்து வருகிறார், மோர்பி பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரிக்க மாநில அரசு எஸ்ஐடியையும் அமைத்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை மாலை கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் காயமடைந்தவர்கள் மோர்பி சிவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து விபத்துக்குப் பிறகு மோர்பி பாலத்தின் நிர்வாகக் குழுவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதியளித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை கேபிள் பாலம் இடிந்து இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் குஜராத்தின் மோர்பி நகரம் திங்கள்கிழமை தானாக முன்வந்து ‘பந்த்’ கடைப்பிடிக்கவுள்ளது