சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் ப்ரக்யான் ரோவரை எழுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதுவரை சிக்னல் கிடைக்கவில்லை என்றும் லேண்டர் மற்றும் ரோவரை எழுப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 40 நாட்களில் பல ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தரையிறங்கியது சந்திரயான் 3 விண்கலம்.
முக்கியமாக நிலவின் தென்துருவத்தில் மேற்பரப்பில் சில கனிமங்கள் இருப்பதாக உறுதி செய்துள்ளது. அதாவது, நிலவில் சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான், ஆக்ஸிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்திருக்கிறது.
வெப்ப கடத்துத்திறன் மற்றும் வெப்பநிலையை தெரிந்து கொள்வதற்காக ChaSTE கருவியும் தரையிறங்கும் இடத்தை சுற்றி நில அதிர்வு தொடர்பாக ஆராய்வதற்காக ILSA கருவியும் மின் திறன் கொண்ட துகள்களை பற்றி ஆராய LP கருவியும் விக்ரம் லேண்டரில் அனுப்பப்பட்டுள்ளன. விண்கலத்தில் அனுப்பப்பட்ட ரோவர், 9 நாட்கள் நிலவை சுற்றி வலம் வந்தது. அதையடுத்து வரும் 15 நாட்கள் இரவு என்பதால் ரோவர் மற்றும் லேண்டரின் செயல்பாடுகள் செயலிழந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் சூரியனின் ஒளி மீண்டும் நிலவு மீது படத்தொடங்கியது. இதனால் மீண்டும் ரோவர் மற்றும் லேண்டரை எழுப்பப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ளது. APXS மற்றும் LIBS பேலோடுகள் அணைக்கப்பட்டுள்ளன. பேட்டரி ஏற்கனவே முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி முதல் நிலவின் மேற்பரப்பில் சூரிய ஒளி விழ தொடங்கியுள்ள நிலையில், சாதனங்களில் உள்ள சூரிய ஒளி தகடுகள் கூடுதல் ஆற்றலை சேமிக்க தொடங்கியுள்ளன. பூமியிலிருந்து வழங்கப்படும் சிக்னல்களை பெறும் ரிசீவரும் ஆன் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை பூமியிலிருந்து வழங்கப்படும் கட்டளைகளை ஏற்று, ரோவர் உயிர் பெற்று எழுந்தால் அது மீண்டும் நிலவின் மேற்பரப்பில் பயணித்து பல்வேறு கூடுதல் தகவல்களை வழங்கும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளி விழத்தொடங்கியது ஒரு குறிப்பட்ட அளவு வெப்பநிலை வந்த பின் சந்திரயான் 3 விண்கலத்தில் இருக்கும் லேண்டர் மற்றும் ரோவரை எழுப்பும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை லேண்டர் மற்றும் ரோவர் கருவிகளிலிருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை என இஸ்ரோ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விக்ரம் லேண்டர் மற்றும் ப்ரக்யான் ரோவரை எழுப்பும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் heat generater கருவி இல்லாததன் காரணத்தால் தட்டி எழுப்பும் பணிகள் வெற்றியடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் செயல்பாட்டிற்கு வருமெனில் இந்தியாவுக்கு அது போனஸ் பாயிண்டாக மாறும். ஏற்கனவே 14 நாட்கள் நிலவில் பயணம் மேற்கொண்டு பல்வேறு தரவுகளை வழங்கிய நிலையில் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தால் அடுத்த 14 நாட்களில் கூடுதல் தரவுகள் வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.