குஜராத் - அதுல் ரயில் நிலையம் பகுதியில் மாடு மீது மோதியதில் வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது.
குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் வந்தே பாரத் ரயில் மீண்டும் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் வல்சாத்தின் அதுல் அருகே வந்தே பாரத் ரயிலின் மீது மாடு மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ரயிலின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டு, முன்பக்க பகுதி உடைந்துவிட்டது. அதே சமயம் ரயிலின் என்ஜின் அருகே கீழ் பகுதியில் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
தகவலின்படி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வல்சாத்தில் உள்ள அதுல் ரயில் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மாடு அதிவேக ரயிலின் முன் வந்தது. அப்போது மாடு ரயிலில் அடிபட்டது. மாடு மோதியதில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது. இச்சம்பவம் இன்று காலை 8.17 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்துக்கு பிறகு, வந்தே பாரத் ரயில் அதுல் ரயில் நிலையத்தில் சுமார் 26 நிமிடங்கள் நின்ற நிலையில், 8.43 மணிக்கு விபத்து நடந்த பகுதியிலிருந்து புறப்பட்டது. இந்த விபத்திற்கு பிறகு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் ஒரு பெட்டியும் பிரிக்கப்பட்டது.
மேலும், இந்த விபத்தின்போது, வந்தே பாரத் விரைவு ரயிலில் குடிநீர் குழாய் சேதமடைந்து, குடிநீர் விநியோகமுமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கடந்த சில நாட்களில் இரண்டு முறை விபத்துக்குள்ளானது.
முன்னதாக, அக்டோபர் 6ம் தேதி குஜராத்தில் இருந்து மும்பைக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது வந்தே பாரத் ரயில் விபத்தில் சிக்கியது. ரயிலின் வேகம் அதிகமாக இருந்ததால், திடீரென 4 எருமை மாடுகள் தண்டவாளத்தில் வந்தன. இந்த விபத்தை அடுத்து ரயிலின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.