ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில்  "புதிய இந்தியா: உள்நோக்கிப் பார்த்து அணுகுவது" என்ற தலைப்பில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறையின் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். 


தலைவர்கள் அலங்கரித்த ஏபிபி மாநாடு:


முன்னாள் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் அஷ்வினி வைஷ்ணவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பாடலாசிரியரும் கவிஞருமான ஜாவேத் அக்தர், பாடகர்கள் லக்கி அலி மற்றும் சுபா முத்கல் ஆகியோர் ஏபிபி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினர்.


எழுத்தாளர்கள் அமிதவ் கோஷ் மற்றும் தேவ்தத் பட்டநாயக், நடிகைகள் சாரா அலி கான், ஜீனத் அமன், நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா மற்றும் மனோஜ் வாஜ்பாய், பிரபல சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா, விளையாட்டு நட்சத்திரங்கள் ஜ்வாலா குப்தா மற்றும் வினேஷ் போகட் ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினர்.


கடைசி அமர்வில் அனல் பறந்த விவாதம்:


கடைசி நாளான நேற்று நடந்த கடைசி அமர்வில், 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா, பாரத் ராஷ்டிரிய சமிதி சட்டமேலவை உறுப்பினரும் தெலங்கானா முதலமைச்சர் கேசிஆரின் மகளுமான கவிதா, சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் எம்பி பிரியங்கா பிரியங்கா சதுர்வேதி, பாஜக எம்பி பூனம் மகாஜன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை எடுத்து வைத்தனர்.


பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து ராகவ் சட்டா, கே. கவிதா, பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் பேசினர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கு சவாலாக யாரும் இல்லை என பூனம் மகாஜன் கருத்து முன்வைத்தார்.


அனல் பறந்த விவாதத்திற்கு மத்தியில் பேசிய பூனம் மகாஜன், "பாஜக பலம் வாய்ந்தது. ஒன்றாகப் போராடுவோம் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், மோடியைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? தயவுசெய்து 2024 தேர்தலுக்கு முன் அதை முடிவு செய்யுங்கள். பலவீனமான நிலையில் இருந்து, பிரதமர் மோடியின் தலைமையில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது" என்றார்.


3Ms பார்முலா:


இதற்கு பதிலடி கொடுத்த ஆம் ஆத்மி எம்பி ராகவ் சட்டா, "2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒரே சின்னத்தில் போட்டியிட்டால், 1977ல் இந்திரா காந்தி சந்தித்ததை விட, பாஜகவுக்கு மிக மோசமான தோல்வியை கொடுக்க முடியும். பாஜகவுக்கு சவாலாக நாட்டில் புதிய விதமான அரசியல் புதிய யோசனை தேவைப்படுகிறது. புதிய செய்தி, புதிய தூதுவர் மற்றும் புதிய மாடல்  என "3Ms" என்ற ஃபார்முலா மூலம் பாஜகவை தோற்கடிக்க முடியும்" என்றார்.


பாஜகவை கடுமையாக சாடி பேசிய சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் எம்பி பிரியங்கா பிரியங்கா சதுர்வேதி, "மக்கள், இல்லத்தரசிகள் மற்றும் வாழ்க்கைக்கான செலவு, குரோனி முதலாளித்துவம் போன்ற தலைப்புகளில் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், மத்திய அரசின் அமைப்புகளை தங்களின் ஆயுதங்களாக தேர்தல் கருவிகளாக எவ்வாறு சேர்த்துக் கொள்கிறது என்பதை மட்டுமே பாஜக பேசுகிறது. 


இந்திய தேர்தல் ஆணையத்தை எப்படி இந்தியாவின் முழு சமரசம் செய்யப்பட்ட நிறுவனமாக மாற்றுகிறீர்கள் என்று பேசுகிறார்கள். அமலாக்க இயக்குனரகத்தை பாஜகவின் விரிவாக்கப்பட்ட துறையாக மாற்றுவது எப்படி என்று பேசுகிறார்கள்" என்றார்.


அதானி விவகாரம்:


அதானி விவகாரம் குறித்து பேசிய கே. கவிதா, "மோடியின் விரிவாக்கப்பட்ட குடும்பத்தின் அங்கமாக அதானி உள்ளார். பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி நிறுவனத்திற்கு ரூ.12 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதன் பங்குகளை வாங்கிய எல்ஐசிக்கு ரூ.80,000 கோடி நஷ்டம். 


ஆனால் பிரதமர் எதுவும் பேசவில்லை. பிரதமர் மோடி அதானியை பாதுகாக்கவில்லை என்றால், அவர் மீது ஏன் விசாரணை நடத்தப்படவில்லை? அதானியை விசாரிக்க ஏன் ED மற்றும் CBI முனைப்பு காட்டவில்லை?" என கேள்வி எழுப்பினார்.