அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜகவை வீழ்த்த, காங்கிரசுக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆலோசனை கூறியுள்ளார். அதன்படி, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் எனவும், இதுகுறித்து காங்கிரஸ் தாமதிக்காமல் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


நிதிஷ்குமார் யோசனை: 


பீகாரின் பூர்ணியா மாவட்டத்தில் மகாகூட்டணி எனும் பெயரில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் நிதிஷ்குமார் பங்கேற்று பேசினார். அப்போது “ 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராடினால் பாஜகவை 100 இடங்களுக்குள் கட்டுப்படுத்த முடியும். இது தொடர்பாக காங்கிரஸ் விரைவான முடிவை எடுக்க வேண்டும்.  நீங்கள் எனது ஆலோசனையை ஏற்றுக்கொண்டால், காவி கட்சியை 100 இடங்களுக்குள் கட்டுப்படுத்தலாம். இல்லையென்றால், என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.  காவி கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதே தனது ஒரே குறிக்கோள். நான் அதை உண்மையாக்க முயற்சி செய்வேன். முழு நாட்டிலிருந்தும் பாஜக அழிக்கப்பட வேண்டும்” என ஆவேசமாக பேசினார்.


கார்கே பேச்சு:


இதனிடையே, சத்தீஸ்கர் மாநிலம் நவராய்ப்பூரில் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில், அக்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியபோது,  ”நாட்டில் தற்போது நிலவும் கடினமான சூழ்நிலைகளில் நாட்டுக்குத் தகுதி வாய்ந்த, தீர்க்கமான தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி மட்டும் தான். நாங்கள் மக்கள் விரோதமான, ஜனநாயக விரோதமான பாஜகவை தோற்கடிப்பதற்காக ஒரே சிந்தனை கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து சாத்தியமான கூட்டணியை உருவாக்குவதை மீண்டும் எதிர்பார்க்கிறோம்” என கூறினார். கூட்டணிக்கு தயாராக இருந்தாலும் காங்கிரஸின் தலைமையை மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் போன்ற தலைவர்கள் ஏற்பார்களா என்பது சந்தேகம் தான்.


அமித் ஷா பேச்சு:


இந்த சூழலில் பாட்னாவில் பேசிய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை கடுமையாக சாடினார். அதன்படி, “பிரதமர் ஆகும் தனது குறிக்கோளுக்காக பாஜகவிற்கு நிதிஷ்குமார் துரோகம் செய்து விட்டார். இனி அவருக்கு எப்போதுமே பாஜக கூட்டணியில் இடம் கிடையாது. 2025ம் ஆண்டு பொதுத்தேர்தல் மூலம் பீகாரில் பாஜக தாமாகவே ஆட்சியை பிடிக்கும். வாழ்க்கையில் நான் பல பேரை பார்த்து இருந்தாலும், நிதிஷ்குமாரை போல பொய் பேசும் ஒருவரை கண்டதில்லை” என அமித் ஷா சாடினார்.


தேர்தல் பணி தீவிரம்:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொள்ள பாஜக தற்போதே தீவிரமாக களமிறங்கியுள்ளது. குறிப்பாக அந்த கட்சி வலுவாக இல்லாத தென் மாநிலங்களுக்கு, பாஜக தலைவர்களின் வருகை அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களில் தங்கள் கட்சி பலவீனமாக உள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் கூட, மேக்ரோ அளவில் அந்த கட்சி களப்பணி ஆற்றி வருகிறது. இதனிடையே, பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும் என திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அந்த கருத்தை தான் மீண்டும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.