நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின் போது மணிப்பூர் தொடர்பாக பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.


நம்பிக்கையில்லா தீர்மானம்:


மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் இருந்து விளக்கம் பெறும் விதமாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அதன் மீது கடந்த 8ம் தேத் தொடங்கி 3 நாட்களாக விவாதம் நடைபெற்று வந்தது. அதன் முடிவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான  வாக்கெடுப்பிற்கு முன்னதாக, பிரதமர் மோடி உரையாற்றினர். இதனால், மணிப்பூர் தொடர்பாக பிரதமர் மோடி என்ன சொல்லபோகிறார் என மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


முதல் 90 நிமிடங்கள்:


நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசிய பிரதமர் மோடி தனது உரையை தொடங்கிய முதல் 90 நிமிடங்கள் வரை, மணிப்பூர் என்ற வார்த்தையேயே பயன்படுத்தவில்லை. தொடர்ந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளையும், I.N.D.I.A கூட்டணியையும் கடுமையாக விமர்சித்தார். பாஜக ஆட்சியில் செய்த சாதனைகள் என கூறி பல்வேறு விவகாரங்களை பட்டியலிட்டார்.


எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு:


இதனால் வெகுண்டு எழுந்த எதிர்க்கட்சிகள் மணிப்பூர் தொடர்பாக பேசுங்கள் என முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். 100 நிமிடங்களை கடந்தும் மணிப்பூர் தொடர்பாக பிரதமர் மோடி பேசாததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். 5 மணிக்கு பிரதமர் மோடி தனது உரையை தொடங்கிய நிலையில், சரியாக 6.42-க்கு தனது உரையில் முதன்முறையாக மணிப்பூர் எனும் பெயரை உச்சரித்தார்.


மணிப்பூர் பற்றி மோடி சொன்னது என்ன?


மோடி பேசிய போது “மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் இருந்து ஒரு உத்தரவு வந்ததாக அமித் ஷா கூறினார்.  இது மாநிலத்தில் வன்முறைக்கு வழிவகுத்த நிகழ்வுகளை கொண்டுள்ளது. பல குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தன. பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன, இது கண்டிக்கத்தக்கது.  


குற்றவாளிகளை தண்டிக்க மத்திய, மாநில அரசுகள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகின்றன. எங்களின் அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன, மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும் என்று அனைத்து குடிமக்களுக்கும் நான் உறுதியளிக்க விரும்புகிறேன். மணிப்பூர் விரைவில் வளர்ச்சியை நோக்கி  தன்னம்பிக்கையுடன் முன்னேறும்.


“நாடும், இந்த நாடாளுமன்றமும் உங்களுடன் உள்ளது என்பதை மணிப்பூர் மக்களுக்கும், பெண்கள், மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். ஒன்றாக இணைந்து இந்த சவாலை எதிர்கொண்டு அமைதியை மீட்டெடுப்போம். மணிப்பூர் விரைவில் அமைதியை நோக்கி நகர்வதை உறுதிசெய்ய நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம் என்பதை மணிப்பூருக்குச் சொல்ல விரும்புகிறேன்” என்றார். அதோடு, மணிப்பூரில் தற்போது நடைபெறும் கலவரங்களுக்கு காரணமும் காங்கிரஸ் தான் காரணம்” என சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


மணிப்பூருக்கு 10 நிமிடங்கள்:


சுமார் 133 நிமிடங்கள் வரை நீடித்த பிரதமர் மோடியின் உரையானது, ஏதோ ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது போன்று தான் இருந்தது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மணிப்பூர் தொடர்பாக அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும் பாஜகவின் பெருமைகளை மட்டுமே அவர் தனது 2 மணி நேர உரையில் பேசினார்.


நம்பிக்கையில்லா தீர்மானமே மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் பேச வேண்டும் என்பதற்காக தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதுதொடர்பாக பேச பிரதமர் மோடி வெறும் 10 நிமிடங்கள் தான் எடுத்துக்கொண்டார் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.