தேசிய கட்சியான பாஜக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து திமுக குறித்து பேசி வருவது, பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.
பாஜக - திமுக மோதல்:
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் இடையேயான மோதல் வலுப்பெற்று வருகிறது. வழக்கமாக தேசிய அரசியலில் காங்கிரஸ் - பாஜக இடையேயான மோதல் தான் கவனம் பெறும். ஆனால், அண்மை காலமாக தேசிய அளவிலும் பாஜக - திமுக இடையேயான மோதல் பேசுபொருளாகி வருகிறது. குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத்தொடரிலும் மத்திய அமைச்சர்கள் திமுகவை குறிவைத்து பேசுவருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரதமர் மோடி தாக்கு:
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அமைதி காத்து வந்த பிரதமர் மோடியை பேச வைக்கும் நோக்கில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். அதன் மீதான விவாதத்தின் போது, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் திமுகவை கடுமையாக விமர்சித்தனர். அதோடு, திமுக தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்க முயல்வதாக பிரதமர் நரேந்திர மோடியும் குற்றம்சாட்டியிருந்தார். ஏற்கனவே, ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் கூட திமுக குறித்து பிரதமர் பேசி வந்த நிலையில், தற்போது பாஜக முக்கிய தலைவர்கள் நாடாளுமன்றத்திலும் திமுகவை குறிவைத்து பேச தொடங்கியுள்ளனர்.
ஸ்டாலின் பதில்:
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு இருந்த ஸ்டாலின் “நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுகவினரின் குரலைக் கேட்டால், பாஜக அரசு நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது” என குறிப்பிட்டு இருந்தார்.
பாஜகவின் நோக்கம் என்ன?
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள I.N.D.I.A2 கூட்டணியில், காங்கிரசுக்கு அடுத்தபடியாக திமுக இரண்டாவது பெரிய நாடாளுமன்ற எதிர்க்கட்சியாக உள்ளது. இதனிடையே, தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்த கர்நாடகாவிலும், அக்கட்சி காங்கிரசிடம் தோவ்லியுற்று அதிகாரத்தை இழந்தது. இந்நிலையில், தென்னிந்தியா மட்டுமின்றி தேசிய அளவில் பாஜகவிற்கு மிகவும் நெருக்கடி கொடுக்கும் மாநிலமாக தமிழகமும், இங்கு ஆட்சியில் உள்ள திமுகவும் உள்ளது. இதனால், அந்த கட்சியை எதிர்ப்பதும், தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், தேசிய அரசியல் மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் பாஜக மேலும் வலுப்பெற உதவும் என அக்கட்சி தலைமை நம்புகிறது. இதன் காரணமாகவே திமுகவை குறிவைத்து பாஜக தொடர்ந்து பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம்:
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு என பெரிய வாக்கு வங்கி இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவிடம் கூட்டணியில் உள்ளது. அண்மையில் நடைபெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில், பிரதமர் மோடியின் அருகிலேயே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஒருபுறம் திமுகவை கடுமையாக எதிர்த்துக்கொண்டே, மறுபுறம் தமிழகத்தின் மற்றொரு முக்கிய கட்சியான அதிமுக உடன் பயணித்து தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கான பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேநேரம், திமுகவும் பாஜகவிற்கு அரசியல் ரீதியாக தொடர்ந்து தக்க பதிலடி வழங்கி வருகிறது. அதோடு, ராமநாதபுர நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடியே போட்டியிட உள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியே தென்னிந்தியாவை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்வதன் மூலம், இந்த பிராந்தியத்தில் பாஜகவை வலிமையான கட்சியாக மாற்ற முடியும் எனவும் அக்கட்சி நம்புவதாக தெரிகிறது.
எங்களின் வெற்றி..!
இதனிடையே மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோவியுற்றது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு பேசியுள்ளார். அதில் “நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைய இருக்கிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய பிரதமர் 2 மணிநேரமாக அதைப்பற்றி பேசவில்லை. அவர் மணிப்பூர், அரியானா சம்பவங்கள் பற்றி கவலைப்படவே இல்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நாங்கள் தோற்றுப்போவோம் என்று தெரியும். இருந்தாலும் பிரதமரை அவைக்கு வரவைக்க வேறு வழியில்லை என்றுதான் அதை கொண்டுவந்தோம். ஆனால் மணிப்பூர் பற்றியோ, ஹரியானா பற்றியோ அவர் பேசாததால் வெளிநடப்பு செய்தோம். அதிகார போதையில் ஆளுங்கட்சி செயல்பட்டு வருகிறது. இதை தட்டிக்கேட்க முடியவில்லை. மக்கள் அவர்களுக்கு அதிகார பலத்தை கொடுத்து இருக்கிறார்கள்” என டி.ஆர். பாலு தெரிவித்தார்.