போலி செய்திகளைக் கண்டறிந்து வெளிப்படையான சமுதாயத்தை வளர்த்தெடுக்கும் வகையில், முன்னணி ஊடக நிறுவனமான ABP நெட்வொர்க் உடன்  பிரபல கல்வி நிறுவனமான IIM இந்தூர் இணைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.


போலிச் செய்திகளின் அடிப்படை சமூக- உளவியல் காரணிகளைக் கண்டறிந்து, அவற்றைக் களையெடுக்கத் தேவைப்படும் வழிமுறைகளை உருவாக்க இரண்டு தரப்பும் முடிவெடுத்துள்ளது. மேலும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், போலி செய்திச் சூழலை எதிர்த்து மேற்கொள்ள வேண்டிய கொள்கை அளவிலான திட்டங்களைப் பரிந்துரை செய்வதில் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பயிற்சி, கூட்டுக் கருத்தரங்குகள்


இதற்காக IIM இந்தூருடன் இணைந்து, ABP ஊழியருக்கு, குறுகிய கால பயிற்சி/ ஆய்வு வாய்ப்புகள் வழங்கப்படும். கூட்டுக் கருத்தரங்குகளும் நடத்தப்படும். இதற்கென IIM இந்தூர் மற்றும் ABP நெட்வொர்க் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, வெளிப்படையான சமுதாயத்தை உருவாக்கத் தேவையான செயல்முறைகளைக் கூட்டு ஆய்வுகள் மூலம் மேற்கொள்ளும். இதன்மூலம் இந்தியக் குடிமக்கள் டிஜிட்டல் அறிவு பெற்றவர்களாக மாறத் தேவையான விழிப்புணர்வு முன்னெடுக்கப்படும்.


ABP CEO அவினாஷ் பாண்டே கருத்து


புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி குறித்து ABP நெட்வொர்க்கின் தலைமைச் செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே கூறும்போது, ''வெளிப்படையான மற்றும் தகவல்களைப் பெறும் சமூகத்தை உருவாக்குவதில், ABP நெட்வொர்க் எப்போதும் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், போலி செய்திகள் உருவாகும் விதம், அவை ஏற்படுத்தும் சவால்கள், உண்டாகும் விளைவுகளை தடுக்கும் திட்டங்களை வகுக்க முடிவு செய்துள்ளோம்.




இந்த ஒப்பந்தம் ஊடக வெளியின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஏராளமான யோசனைகள் மற்றும் திட்டங்களைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கும் எனவும் நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.



விழிப்புணர்வு மிக்க தேசத்தை உருவாக்கத் திட்டம்


IIM இந்தூரின் இயக்குநர் ஹிமான்ஷு ராய் நிகழ்வில் பேசும்போது, ''ஐஐஎம் இந்தூரின் குறிக்கோளில் சமூக அக்கறையே பிரதானமாக உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், ABP நெட்வொர்க் மக்களைச் சென்றுசேரும் வீச்சு மற்றும் ஐஐஎம் இந்தூரின் அறிவுசார் மேன்மை ஆகியவற்றை ஒருங்கிணைப்போம். அதன் மூலம், விழிப்புணர்வு மிக்க தேசத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தை நாம் அமைக்க முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.