ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாடு நாளை (பிப்ரவரி 24) தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில்  "புது இந்தியா: உள்நோக்கிப் பார்த்து அணுகுவது" என்ற கருப்பொருளில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள்,  கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள உள்ளனர். 


ஐடியாஸ் ஆஃப் இந்தியா:


இந்தியாவில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் இந்த நேரத்தில் நடைபெறும் ஏபிபி நெட்வொர்க்கின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மாநாடு, உலக அளவில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ள சமூக - அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது. 


ஏபிபி நெட்வொர்க்கின் இந்த மாநாட்டில்  இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முத்திரைப்பதித்த, தொழில்துறையைச் சேர்ந்த சாதனையாளர்கள்,  இளம் படைப்பாளர்கள், கலை மற்றும் எழுத்துத்துறையின் வெற்றியாளர்கள், பாராட்டப்பட்டவர்கள், அறிவுகூர், அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் என பல்துறை ஜாம்பவான்கள் பங்கேற்பதோடு மட்டுமல்லாமல் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.


வாழ்க்கை பாடம் குறித்து உரையாற்றும் ஜாவேத் அக்தர்:


இந்த நிகழ்வின் முதள் நாளான நாளை, பிரபல திரைக்கதை எழுத்தாளரும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் கலந்து கொள்கிறார். மேலும், "ஜாம்பவான் இடமிருந்து கற்றல்: பாடங்கள், நல்லது மற்றும் கெட்டது" என்ற தலைப்பில் அவர் உரையாற்ற உள்ளார்.


ஐந்து தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றவர் ஜாவேத் அக்தர். 1999இல் பத்மஸ்ரீ, 2007இல் பத்ம பூஷண் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். இந்தித் திரையுலகின் மற்றொரு முக்கிய பாடலாசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான சலீம் கானுடன் (சல்மான் கானின் தந்தை) அக்தரின் கூட்டணி அவருக்குப் பெரும் புகழைக் கொண்டு வந்தது. இருவரும் இணைந்து பல பிளாக்பஸ்டர்களை திரையுலகுக்கு வழங்கியுள்ளனர்.


ஜாவேத் அக்தர் மற்றும் சலீம் கான் ஆகியோர் 'தீவார்', 'ஷோலே' போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளனர். ஆன்டி-ஹீரோவை மையமாக கொண்டு செல்லுலாய்டின் வடிவில் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.


நாட்டின் பல பிரச்னைகளுக்காக ஜாவேத் அக்தர் குரல் கொடுத்து வருகிறார். மேலும், 2019 பொதுத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்காக பிரச்சாரம் செய்வதன் மூலம் அரசியலில் முத்திரை பதித்துள்ளார். ராஜ்யசபா உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.


புதிய இந்தியா:


'புதிய இந்தியா' எதனால் கட்டமைக்கப்பட்டுள்ளது, இப்போது ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் நமது நாடு, சுதந்திரம் அடைந்து 100ஆவது ஆண்டான 2047ஆம் ஆண்டுக்குள் எப்படி வளர்ந்த நாடாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்பது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் தங்களின் கருத்தை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.