உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். பாதயாத்திரை, இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில், மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை திருமலை திருப்பதி கோயிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. அதேபோல மார்ச் மாதம் சிறப்பு தரிசனத்திற்கான (ரூ. 300) டிக்கெட் முன்பதிவுகள் நாளை (பிப். 24ஆம் தேதி ) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. மேலும் ஏப்ரல் மற்றும் மே மாததிற்கான அங்கபிரதட்சிணத்தின டிக்கெட் முன்பதிவுகள் நாளை மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


நேற்றைய தினம் மாலை 4 மணிக்கு அர்ஜித சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. கல்யாண உத்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோத்சவம், சஹசர தீபாளங்கர சேவை உள்ளிட்ட ஸ்ரீவாரி அர்ஜித சேவைக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.


tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் தங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. அதேசமயம் பாலாலயம் தொடர்பான பணிகள் காரணமாக பிப்ரவரி 22 முதல் 28ம் தேதி வரையில் சிறப்பு தரிசனத்திற்கான அனுமதி இருக்காது எனவும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பாலாலயம் என்றால் என்ன?


2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் தங்க கோபுரத்திற்கு பொன் மூலம் பூசப்பட்ட புதிய தகடுகள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பணி சுமார் ஆறு மாதகாலம் நடைபெறும் என கூறப்படுகிறது.  இந்த சமயத்தில் பாலாலயம் செய்யப்படும்போது வேறு ஒரு மூலவரை ஏற்பாடு செய்யும் பணிகள் நடைபெறும். அதேசமயம்  திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தற்போது இருக்கும் மூலவரையும் வழிபடலாம். மூலவருக்கு நடைபெறும் கட்டண சேவைகள் வழக்கமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர் 1957- 58 ஆம் ஆண்டில் புதிய தங்க தகடுகள் பொருத்தப்பட்ட போதும், 2018 ஆம் ஆண்டு பாலாலயம் நடைபெற்ற போதும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


தேவஸ்தான ரொக்கம்: 


கடந்த மூன்று ஆண்டுகளில் ஏழுமலையானின் ரொக்க டெபாசிட் வெகுவாக அதிகரித்துள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.5 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான 10.3 டன் அளவில் தங்கம் உள்ளது. 2019ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி 13,025 கோடி ரூபாய் ரொக்கப்பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. தற்போது ரூ.15 ஆயிரத்து 938 கோடி ரொக்கம் டெபாசிட் தொகை உள்ளது. ஏழுமலையானின் தங்க நகைகள், ரொக்கம் ஆகியவை அதிக வட்டி தரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தான் டெபாசிட் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தச் சூழலிலும் சாமியின் பணம் மற்றும் தங்க நகைகளை தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்ய மாட்டோம் என தேவஸ்தான நிர்வாக செயலாளர் ஏ.வி. தர்ம ரெட்டி ( AV Dharma Reddy) தெரிவித்துள்ளார்.