இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியுடைய வரலாற்றில் பல்வேறு அம்சங்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்று  ஏபிபி உச்சி மாநாட்டில் பிரிட்டன் முன்னாள் உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் தெரிவித்துள்ளார். 


ஐடியாஸ் ஆஃப் இந்தியா


பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஏபிபி நெட்வர்க்கின் வருடாந்திர நிகழ்வான 'ஐடியாஸ் ஆஃப் இந்தியா' உச்சி மாநாட்டின் மூன்றாவது எடிஷன் மும்பையில் நேற்று (பிப்.23) தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை ஏபிபி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே, சீஃப் எடிட்டர் அதிதேப் சர்கார் மற்றும் ஏபிபி பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி துருபா முகர்ஜி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். 


இந்த நிகழ்வில் சமூகத்தில் முத்திரை பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், உச்சி மாநாட்டின் முதல் நாளான நேற்று ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, நடிகர் அமீர் கான், இயக்குநர் அட்லீ, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசினர்.


இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை


இரண்டாவது நாளான இன்று (பிப்ரவரி 24) நடைபெற்ற உச்சி மாநாட்டில், பிரிட்டனின் முன்னாள் உள்துறைச் செயலாளரும், ஃபரேஹாம் எம்.பி.யுமான சுயெல்லா பிரேவர்மேன் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, ''பிரிட்டனுக்கு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2019-ல் 2.4 லட்சம் ஆக இருந்த இந்த எண்ணிக்கை, தற்போது 7 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியுடைய வரலாற்றின் பல்வேறு அம்சங்கள் கண்டிக்கப்பட வேண்டும். மன்னிக்கப்படக் கூடாது. ஆனால், நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் பார்க்கும்போது இந்தியா சுய ஆட்சிக்கான வெற்றியைப் பெற்ற நாட்டுக்கான சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இந்தியா எதிர்பார்ப்புக்கு அப்பால் சிறந்து விளங்குகிறது.


காமன்வெல்த்தை எடுத்துக் கொண்டால், இது ஒரு சிறந்த உறவாகவும், வரலாற்றுத் தொடர்பைக் கொண்ட சிறந்த நாடுகளின் சமூகமாகவும், எதிர்காலத்திற்காக ஒத்துழைக்கக் கூடியதாகவும் உள்ளது.


உடனடிப் போர் நிறுத்துத்துக்கு நான் ஆதரவில்லை


இஸ்ரேலுக்குத் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள எல்லா உரிமைகளும் உண்டு. காசாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கான அழைப்பு விடுக்கப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவித்து, ஆயுதங்களைக் கீழே போட்டு, அமைதியை நிலைநாட்டினால் இந்தப் போர் உடனே நின்றுவிடும். அந்த வழியில் வேண்டுமானால், உடனடி போர் நிறுத்தத்தைக் கொண்டு வரலாம்" என்று சுயெல்லா பிரேவர்மேன் தெரிவித்துள்ளார்.