உத்தரபிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ,க, ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே அதிக சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநில தேர்தல் முடிவுகள், விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநில மக்களின் மனநிலையை கணிக்கும் விதமாக ஏபிபி செய்தி நிறுவனமும், சி-வோட்டரும் இணைந்து உத்தரபிரதேச சட்டசபை கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளனர். வாக்களிக்கத் தகுதியான 18 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், மொத்தமுள்ள 403 தொகுதிகளில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. கூட்டணி 213 தொகுதிகளில் இருந்து 221 தொகுதிகள் வரை கைப்பற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கூட்டணி 152 இடங்களில் இருந்து 160 இடங்கள் வரை வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல, முன்னாள் முதல்வரான மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கூட்டணி 16 முதல் 20 இடங்களை கைப்பற்றக்கூடும். காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 10 இடங்களை கைப்பற்றக்கூடும். பிற கட்சிகள் 2 முதல் 6 இடங்களை கைப்பற்றக்கூடும் என்றும் கருத்துக்கணிப்பின் முடிவில் வெளியாகியுள்ளது.
ஏபிபி நிறுவனமும்- சி வோட்டரும் இணைந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் குறித்து மக்களின் மனநிலை பற்றி தொடர் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில், பா.ஜ.க.வின் செல்வாக்கு படிப்படியாக சரிந்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதேசமயத்தில், சமாஜ்வாதியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 259 முதல் 267 இடங்கள் வரை கைப்பற்றும் என்று தெரியவந்தது. அக்டோபர் மாதத்தில் 241 முதல் 249 வரை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது. தற்போது, 213 இடங்கள் முதல் 221 இடங்கள் வரை மட்டுமே பா.ஜ.க. கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
அதேசமயத்தில், செப்டம்பர் மாதம் 109 இடங்கள் முதல் 117 இடங்கள் வரை மட்டுமே கைப்பற்றும் என்று கணிக்கப்பட்ட அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கூட்டணி, அக்டோபர் மாதத்தில் 130 முதல் 138 இடங்கள் வரை என்று உயர்ந்து, தற்போது நவம்பர் மாதத்தில் 152 இடங்கள் முதல் 160 இடங்கள் வரை கைப்பற்றக்கூடும் என்ற அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. அதேபோல, பகுஜன் சமாஜ்வாதியின் கூட்டணி செல்வாக்கும் சற்றே அதிகரித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் 12 இடங்கள் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்ட பகுஜன் சமாஜ்வாதி, நவம்பர் மாதத்தில் 20 இடங்கள் வரை கைப்பற்றக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய அளவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி 3 இடங்களில் இருந்து 10 இடங்கள் வரை மட்டுமே கைப்பற்றும் எனும் அளவிற்கு முன்னேறியுள்ளது.
கடந்த தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. கூட்டணி 325 இடங்களிலும், சமாஜ்வாதி கூட்டணி 48 இடங்களிலும், பகுஜன் சமாஜ்வாதி கூட்டணி 19 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 7 இடங்களிலும், பிற கட்சிகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. கருத்துக்கணிப்பில் சமாஜ்வாதியின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே செல்வது பா.ஜ.க.விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.