கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மே 13ஆம் தேதி, முடிவுகள் வெளியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.


தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு:


இந்த சூழ்நிலையில், ABP News - CVoter team இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது. அதில், பல தகவல்கள் வெளியாகி அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. குறிப்பாக, கடந்த 9 ஆண்டுகளாக மோடி பிரதமராக பதவி வகித்தபோதிலும் அவரின் செல்வாக்கு பெரிய அளவில் குறையவில்லை.


பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, சிறப்பாக இருப்பதாக 47.4 சதவிகிதத்தினர் பதில் அளித்துள்ளனர். மோசமாக இருப்பதாக 33.8 சதவிகிதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் செயல்பாடுகள் சுமாராக இருப்பதாக 18.8 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர். 


கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ், 224 தொகுதிகளில் 121 தொகுதிகளில் வென்றி ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, 74 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. மூன்றாவது முக்கிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம், 29 தொகுதிகளில் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது.


மாஸ் காட்டிய பிரதமர் மோடி:


கர்நாடகாவில் ஆட்சியை பறி கொடுத்தாலும் பிரதமர் மோடியின் செல்வாக்கு பாஜகவுக்கு குறிப்பிட்ட அளவுக்கு உதவியுள்ளது கருத்துக்கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. 


கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், பாஜக பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இருந்தபோதிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆட்சி அமைக்க முதலில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. 




ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு முன்னதாகவே, அவர் பதவியை ராஜினாமா செய்தார்.


இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவோடு மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எச்.டி. குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், ஆட்சி அமைத்த 14 மாதங்களிலேயே, ஆளும் கூட்டணியின் 16 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதை தொடர்ந்து, கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.


இதனை தொடர்ந்து, எடியூரப்பா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார். ஆனால், எடியூரப்பாவுக்கு எதிராக பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்த, முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும்படி பாஜக உயர் மட்ட தலைவர்கள் எடியூரப்பாவை கேட்டு கொண்டதாக கூறப்பட்டது.


இறுதியில், முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக, பசவராஜ் பொம்மைக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, பாஜக அரசு மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது. இது, பாஜகவுக்கு எதிராக தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் உறுதியாகியுள்ளது.


பொறுப்பு துறப்பு: இந்த கருத்துக்கணிப்பு, சி வோட்டர் நிறுவனத்தால் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. கர்நாடக முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 24,759 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. இதில், ±3 to ±5% வரை மாற்றம் இருக்க வாய்ப்பு.