கடந்த ஆகஸ்ட் 23 அன்று, ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் 16 வயது பள்ளி மாணவி, தன்னை தொந்தரவு செய்த இளைஞர் ஒருவரைப் பற்றி தனது தந்தையிடம் கூறிவிட்டு தூங்கச் சென்றார். சில மணி நேரங்களுக்குப் பிறகு, தூங்கி எழுந்தபோது அவரின் முதுகில் கடும் வலி இருந்துள்ளது. எரியும் வாசனை வந்துள்ளது.
பின்னர்தான், 12ஆம் வகுப்பு மாணவி, தன் உடலில் தீப்பிடித்திருப்பதை உணர்ந்துள்ளார். அவரை துன்புறுத்தியதாகக் கூறப்படும் ஷாருக் ஹுசைன், அவருக்கு உயிருடன் தீ வைத்துள்ளார். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார். காவல்துறையினரால் ஷாருக் உசேன் கைது செய்யப்பட்டபோது அவர் சிரித்து கொண்டே இருந்துள்ளார். இது வீடியோக்களில் பதிவாகி உள்ளது.
சிறுமி மாஜிஸ்திரேட்டிடம் தனது மரண வாக்குமூலத்தில் ஷாருக்கின் பெயரை குறிப்பிட்டுள்ளார். அவர் 10 நாட்களுக்கு முன்பு தனது மொபைலில் பள்ளி மாணவியை அழைத்துள்ளார். தனது நண்பராக இருக்குமாறு அவரை தொந்தரவு செய்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அவரின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தபோது சிறுமியை அவர் தாக்கி உள்ளார்.
பின்னர் திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் மீண்டும் அவருக்கு போன் செய்து, தன்னிடம் பேசாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி அளித்த வாக்குமூலத்தில், "இந்த மிரட்டல் குறித்து எனது தந்தையிடம் தெரிவித்தேன். அதன்பிறகு செவ்வாய்கிழமை அந்த நபரின் குடும்பத்தினரிடம் பேசுவதாக எனது தந்தை உறுதியளித்தார்.
இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றோம். நான் வேறொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். செவ்வாய்கிழமை காலை, முதுகில் வலியை உணர்ந்தேன். ஏதோ எரியும் வாசனையை உணர்ந்தேன். நான் கண்களைத் திறந்தபோது அவன் ஓடிப்போவதைக் கண்டேன். வலி தாங்காமல் கத்த ஆரம்பித்துவிட்டு அப்பாவின் அறைக்கு சென்றேன். எனது பெற்றோர் தீயை அணைத்து என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்" என்றார்.
பேசுவதற்கு கடினப்பட்ட அவர், தனது முகம் தவிர உடல் முழுவதும் எரிந்துவிட்டதாக கூறினார். மற்றொரு நபரின் பெயரையும் சிறுமி குறிப்பிட்டுள்ளார். சோட்டு கான் என்ற அந்த நபரிடம் காவல்துறை விசாரணை செய்து வருகிறது. அவரது மரணம் தொடர்பாக தும்காவில் பெரும் போராட்டங்கள் நடந்ததைத் தொடர்ந்து, தும்காவில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரும் குற்றம் சாட்டப்பட்டவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வழக்கு அரசியல் ரீதியாக மாறியுள்ளது. பெண்கள் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவதாக எதிர்க்கட்சியான பாஜக, முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த வழக்கு விரைவாக விசாரிக்கப்படும் என்று மாநில அரசு கூறியுள்ளது. முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஒரு உயர் காவல்துறை அலுவலர் (கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் மட்டத்தில்) வழக்கை மேற்பார்வையிடுவார் என்று அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அறிவித்தார்.