காலையில் கண்விழித்தவுடன் நம்மில் பலருக்கு ஒரு கப் காப்பி அல்லது ஒரு கப் டீ வேண்டும். வண்டிக்கு பெட்ரோல் போடுவதுபோல் டீ குடித்தால் தான் என்னால் இயங்கவே முடிகிறது என்றும் நாம் சொல்லிக் கொள்வோம். ஆனால் உண்மையில் காலையில் எழுந்தவுடன் டீ குடிக்கலாமா? என்ன சொல்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்? இதோ உங்களுக்காக.
நியூட்ரஸி லைஃப்ஸ்டைல் மருத்துவமனையின் சிஇஓ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரோகினி பாட்ட்லீ எம்பிபிஎஸ் கூறியதாவது:
தேநீரில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அதில் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் அதிகம். தேநீர் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதுபோல் உடலில் வளர்சிதை மாற்றத்தையும் சீராக்கும். ஆனால் தேநீர் அன்றாடம் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அருந்தினால் அது நிச்சயமாக வயிற்றில் அசிடிட்டியை உண்டாகும். ஜீரணத்தைப் பதம் பார்க்கும். வாய் முதல் வயிறு வரை உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் அழித்துவிடும். நெஞ்செரிச்சல் போன்ற உபாதைகள் உருவாகும்.
1. தலைவலி:
காலை எழுந்தவுடன் உங்கள் தலைவலியைப் போக்க நீங்கள் ஒரு கப் தேநீர் அருந்தி இருப்பீர்கள். ஆனால் அதில் உள்ள கேஃபைனால் அதுவே உங்களுக்கு இடையூறாக மாறியிருக்கும். ஆகையால் தூங்கச் செல்லும் முன் நிறைய தண்ணீர் அருந்திவிட்டுச் செல்லுங்கள்.
2. அஜீரணம் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு:
தேநீரை வெறும் வயிற்றில் அருந்தினால் அது வயிற்றில் காற்றை உருவாக்கும். இது ஜீரண மண்டலத்தைப் பாதிக்கும். தேநீர் டையூரிட்டிக் தன்மை கொண்டது. இது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும். ஆகையால் அதற்கேற்ப தண்ணீர் அருந்தாவிட்டால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுவிடும். இரவு முழுவதும் தூக்கத்தில் உடல் ஏற்கெனவே கொஞ்சம் நீர்ச்சத்தை இழந்திருக்கும். அத்துடன் காலையில் வெறும் வயிற்றில் தேநீர் அருந்தினால் அதில் உள்ள தியோஃபைலைன் என்ற வேதிப்பொருள் மலச்சிக்கலை உண்டாக்கும்.
3. ஊட்டச்சத்தை கிரஹிப்பதில் குறைபாடு
தேநீரில் டேனின் என்றொரு வேதிக்கூறு இருக்கின்றது. இது உணவில் உள்ள இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுகொள்ளவிடாமல் தடை ஏற்படுத்தும்.
4. அசிடிட்டி
வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவதால் அது வயிற்றில் உள்ள அல்கலைன் தன்மையைக் குறைத்து அசிடிட்டியை அதிகப்படுத்தும். அதனால் நெஞ்செரிச்சல் ஏற்படுத்தும்.
ஆகையால் வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவதை தவிர்க்கலா எனக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர்.
கிரீன், ஒயிட் டீ ட்ரை பண்ணலாமே:
பாலில் கலந்து பருகும் தேநீருக்கு நிறைய மாற்று வந்துவிட்டது. இப்போது அதில் மிகவும் பிரபலமாக இருப்பது ஒயிட் டீ.
தேயிலை செடியில் இருந்து தான் அனைத்து விதமான தேயிலைகளையும் பறிக்கிறோம். ஆனால் ஒவ்வொரு வகையான தேயிலையும் எப்படி பதப்படுத்தப்படுகிறது என்பதை பொறுத்தே அதன் நன்மைகள் மாறுபடும்.
கிரீன் டீ என்பது கொழுந்து இலைகளை மட்டுமே எடுத்து காயவைத்து பொடித்து பேக் செய்வது.
ஆனால் ஒயிட் டீயின் தேயிலை குறைந்த அளவே பதப்படுத்தப்படும். செடியின் இலைகளும் மொட்டுகளும் முழுமையாக பூப்பதற்கு முன்னரே எடுக்கப்படும். அந்த மொட்டுகளின் மீது வெள்ளை முடிகள் காணப்படும். அதனால் தான் அவை ஒயிட் டீ என்று அழைக்கப்படுகிறது.
இந்த தேயிலை வசந்தகாலத்தில் அதாவது வருடத்தில் ஒருமுறை மட்டுமே அதுவும் சூரியன் உதயமாவதற்கு முன்னரே சுமார் 3ல் இருந்து 5 மணிக்குள் பறித்து ஈரப்பதத்தை நீக்கி பேக் செய்து விடுவார்கள்.
கிரீன் டீயை விடவும் வெள்ளை டீயில் 30 % அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன.