மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான்.
பண மோசடி வழக்கில் அக்கட்சியின் மூத்த தலைவர் சத்யேந்தர் ஜெயின், கடந்தாண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். இவர், டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர். இதை தொடர்ந்து, டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக இருந்தவர் மணிஷ் சிசோடியாதான்.
நெருக்கடிக்கு உள்ளாகும் ஆம் ஆத்மி கட்சி:
சிசோடியாவை தொடர்ந்து, அதே வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். இப்படிப்பட்ட சூழலில், இந்த வழக்கில் அடுத்தப்படியாக அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
மாநில முதலமைச்சரை கைது செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. பல நடைமுறைகள் உள்ளன. மாநிலத்தின் நிர்வாகமே முடங்க வாய்ப்புள்ளது. அப்படி கைது செய்யப்பட்டால், தனது முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வாரா? இல்லை அந்த பதவியில் தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும் அவரே முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ராஜினாமா செய்கிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், இந்த விவகாரத்தில் மக்களின் கருத்தை கேட்க ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. வழக்கமாக அதி முக்கியமான விவகாரங்களில் மக்களின் கருத்தை கேட்டே ஆம் ஆத்மி கட்சி முடிவு எடுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, பஞ்சாப் முதலமைச்சர் வேட்பாளராக யாரை முன்னிறுத்த வேண்டும் என்ற கேள்வி எழுந்தபோது, மக்களின் கருத்துக்கணிப்பு நடத்தி பகவந்த் சிங் மானை தேர்வு செய்தது.
அந்த வகையில், முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டுமா? என்ற கேள்வியை முன்வைத்து ஆம் ஆத்மி கட்சியினர் வீடு வீடாக சென்று மக்கள் கருத்தை கேட்டு வருகின்றனர்.
இதுகுறித்து டெல்லி அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், "முதல் நாளான இன்று லட்சுமி நகர் தொகுதியில் வீடு வீடாக சென்று மக்களிடம் பேசினோம். இதுவரை, நாங்கள் பேசியவர்கள், கெஜ்ரிவால் பொதுமக்களுக்காக நிறைய பணிகளைச் செய்துள்ளார் என்று கூறுகிறார்கள்.
இலவச மின்சாரம், குடிநீர், மருத்துவம், கல்வி, பெண்களுக்கு பஸ் பயணம், முதியோர் யாத்திரைக்கு வசதி செய்து கொடுத்த முதலமைச்சர், பதவி விலகாமல் சிறையில் இருந்து ஆட்சியை நடத்த வேண்டும். சதி திட்டத்தின் கீழ் இந்தக் கைதுகள் நடக்கின்றன என்றும் மக்கள் உறுதியாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் பதவி விலகக் கூடாது. மக்களவை தேர்தலில் தோல்வி பயத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது" என்றார்.