பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள ஐந்து மாநில தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது.


நக்சல்களின் தாக்கம் அதிகமுள்ள சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 7ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மிசோரத்தில் நவம்பர் மாதம் 7ஆம் தேதியும் மத்திய பிரதேசத்தில் நவம்பர் மாதம் 17ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 


பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள ஐந்து மாநில தேர்தல்:


ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதியும் தெலங்கானாவில் நேற்றும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளும் நாளை மறுதினம் (டிசம்பர் மாதம் 3ஆம் தேதி) எண்ணப்பட்டு அறிவிக்கப்படவிருந்தது. ஆனால், மிசோரம் மாநிலத்தில் மட்டும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பை வேறு நாளுக்கு தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.


மிசோரத்தில் கிறிஸ்தவ சமூகத்தவரே பெரும்பான்மையான மக்களாக உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் கிறிஸ்தவர்கள், தேவாலயத்துக்கு சென்று பிரார்த்தனை மேற்கொள்வது வழக்கம். இப்படியிருக்க தேர்தல் முடிவுகளை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தால், தங்களின் மத சடங்குகள் தடைபடும் எனக் கூறி, தேர்தல் முடிவுகளை தள்ளிவைக்கக் கோரி கோரிக்கை விடுத்து வந்தனர்.


ஆனால், மிசோரம் மக்களின் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்காமல் இருந்து வந்தது. இச்சூழலில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியை மாற்றக் கோரி மிசோரம் முழுவதும் இன்று நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். சமூக சேவை அமைப்புகள், தேவாலயங்கள், மாணவர் அமைப்புகள் ஆகியவற்றின் குடை அமைப்பான மிசோரம் என்ஜிஓ ஒருங்கிணைப்புக் குழு (என்ஜிஓசிசி) ஒரே நேரத்தில் போராட்டங்களை ஒருங்கிணைத்தது.


தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு:


இந்த நிலையில், மிசோரத்தின் தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதிக்கு பதில் டிசம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "டிசம்பர் 3ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), மிசோரம் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருப்பதால், 3ஆம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) பதில் வேறு வார நாளில் வாக்குகள் எண்ணும் தேதியை மாற்றக் கோரி பல்வேறு தரப்பிலிருந்து ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.


இந்த கோரிக்கைகளை பரிசீலித்த தேர்தல் ஆணையம், டிசம்பர் 3ஆம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) பதில் டிசம்பர் 4ஆம் தேதி (திங்கட்கிழமை) மிசோரம் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலுக்கான எண்ணும் தேதியை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஜோரம்தங்கா முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். பிரதான எதிர்க்கட்சியாக சோரம் மக்கள் இயக்கம் உள்ளது. அதற்கு இணையான செல்வாக்கமிக்க கட்சியாக காங்கிரஸ் உள்ளது.