புதுடெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


டெல்லியில் கடந்த 2021-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி, 849 கடைகள் தனியாருக்கு ஒதுக்கப்பட்டது. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.-யும் குற்றம்சாடின. இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து அக்டோபர்,4-ம் தேதி அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டது அமலாக்கத்துறை. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முக்கிய நபராகவும் நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை கடந்த அக்டோபர்,4-ம் தேதி கைது செய்தது. 6 மாதங்களாக சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கிற்கு தற்போது ஜாமின் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.


இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தட்டா, பி.பி. வாராலே ஆகிய மூன்று பேர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.  இதை விசாரணை செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் பணம் ஏதும் மீட்கப்படவில்லை. ஆதாரம் இல்லாமல் சஞ்சய் சிங்கை 6 மாதங்களாக சிறையில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு நீதிமன்ற காவல் அவசியமா? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அவர் ரூ.2 கோடி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டை விசாரணையில்கூட நீங்கள் அறிந்துகொள்ளலாம்” என்று அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பினர். 


 


இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் இந்த வழக்கில் உணவக உரிமையாளரான தினேஷ் அரோராவுக்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டிருந்தது. இவரின் நெருங்கிய நண்பரான சஞ்சய் சிங்க்கிற்கு இந்த வழக்கில் தொடர்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தினேஷ் அரோரா கைது செய்யப்பட்டு அவருக்கு ஜாமினும் வழங்கப்பட்டது. 


தேர்தல் நெருங்கும் நிலையில், சஞ்சய் சிங்கிறகு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதகுந்ததாக இருக்கிறது. அதோடு, சஞ்சய் சிங் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என அமலாக்கத் துறை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், ஜாமீனில் இருக்கும் வரை இந்த வழக்கு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம்' என்கிற நிபந்தனையுடன் சஞ்சய் சிங்குக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.


மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகிய ஆம் ஆத்மி தலைவர்கள் சிறையில் உள்ளனர். இவர்கள் தவிர, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்படியான சூழலில், இந்த வழக்கில் ஜாமின் பெற்ற முதல் நபராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவராக சஞ்சய் சிங் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.