டெல்லி ராஜ்பூர் சாலையில் உள்ள சமோசா கடை மீது கடந்த மார்ச் 31ம் தேதி வேகமாக வந்த கார் மோதியதில் 6 பேர் காயமடைந்தனர்.
டெல்லி ராஜ்பூர் சாலையில் நடந்த விபத்தின் பயங்கரமான சிசிடிவி காட்சிகள் குறித்தான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து டெல்லி காவல்துறையின் தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்ட டிரைவர் ஒரு வழக்கறிஞர். அந்த விபத்தின்போது, அவருடன் அவரது மனைவியும் இருந்துள்ளார். இதையடுத்து, விபத்தை உண்டாக்கிய அந்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
டெல்லி ராஜ்பூர் சாலையில் உள்ள சமோசா கடையில் சில வாடிக்கையாளர்கள் சமோசா சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த வெள்ளை நிற கார் திடீரென கடைக்குள் புகுந்து சமோசா சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. கடையின் நுழைவாயிலில் கார் பலமாக மோதியதால், சிலர் பக்கவாட்டில் மோதி விழுந்தனர். கார் மோதிய பிறகு சிலர் வலியால் துடிப்பதும் அந்த வீடியோவில் பார்க்கலாம்.
அதனை தொடர்ந்து, கார் மோதிய சில நொடிகளில் அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களுக்கு உதவ ஓடி வந்துள்ளனர். அந்த காட்சிகளும் வீடியோவில் காணலாம்.
விபத்து பற்றி முதற்கட்ட விசாரணை நடத்திய காவல்துறையினர், பிஎஸ் சிவில் லைன்ஸில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கார் ஓட்டுநர் பராக் மைனி கைது செய்யப்பட்டு, விதிமீறல் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட மருத்துவ விசாரணையின்படி, ஓட்டுநர் குடிபோதையில் இல்லை, இருப்பினும், இரத்த மாதிரி பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தனர்.